2021-09-02

சுப்புடு @ பி.வி.சுப்ரமணியம் | கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி


சுப்புடு @ பி.வி.சுப்ரமணியம் 



பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சியைக் கடுமையான விமர்சனத்தின் மூலம் முடக்குவதாக முகநூலில் தொடர்ந்து பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. அதனையொட்டி என்னுடைய பார்வையை முன்வைக்க நினைக்கிறேன்.

முதலில் எல்லா வகை கலை வடிவிலும் ஆண் பெண் என்ற பேதம் இல்லை. இலக்கியமும் ஒரு கலை வடிவம்தானே. யார் பலவீனமாகவர், யார் பலசாளி என்பதன் கூற்றுக்குக் கலைகளில் இடம் இல்லை. கலை இரு பாலினத்திற்கும் பொதுவானது. ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் இருக்கும் கலையில், பெண்களுக்கான சிறப்பு சலுகையை எதிர்ப்பார்ப்பதையே அவர்களை அவமானப்படுத்துவதாகப் பார்க்கிறேன். சலுகையை எதிர்ப்பார்ப்பவர்களால் ஒருபோதும் ஒரு தரமான கலையைப் படைக்க முடியாது. ஆண் பெண்ணுக்கிடையில் சில தர்மமும் சில விதிமுறைகளும் உண்டு. ஆனால் அதனை கலையில், திறமையில் அமல்படுத்தினால் கலை வளராது. ஒரு கலையை வளர்க்க அதனை வேறொரு தளத்திற்குக் கொண்டுச் செல்ல, விமர்சனங்கள் ஓர் அவசியமான கூறாகத்தான் பார்க்கிறேன்.


நான் பல கலை துறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன், முக்கியமாக நாட்டியத் துறையிலும் சங்கீதத் துறையிலும். இவை இரண்டிலும் கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டேதான் இருக்கிறது. இந்த விமர்சனங்கள் எப்போது அதிகம் நடக்கிறது என்று கொஞ்சம் அலசிப் பார்த்தால், ஒரு கலைஞரின் தொடக்கக் காலத்தில்தான் என அனுபவம் உள்ளவர்களுக்குத் தெரியும். அது அந்தக் கலைஞரின் ஆர்வத்தைக் குறைக்கவோ, அல்லது மன ரிதீயாக பலவீனம் அடையச் செய்யவோ அல்ல. அவரை மேலும் சிறப்புடன் செயல்படுத்துவதற்காக. அவரிடம் உள்ள ஆற்றலை மேலும் வளர்த்துக் கொள்ள விமர்சனங்களை ஒரு தூண்டு கோளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


நாட்டியத் துறையில் ஆரம்பக் கால பயிற்சிகள் மிகக் கடுமையானதான இருக்கும். மறுநாள் கால்களைத் தரையில் ஊன்ற முடியாமல் கூட இருக்கும். பயிற்சிகள் ஏற்படுத்தும் வலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் எப்படி ஒரு நர்த்தகியாவது. எந்தக் கலையும் அவ்வளவு எளிதாக நம்மிடம் வந்துச் சேராது. அதற்கு நிறைய உழைப்பு, தர்மம், அறம், அர்ப்பணிப்புத் தேவை. முக்கியமாக அது ஏற்படும் வலிகளையும் அவமானங்களையும் பொருத்துக் கொண்டால் மட்டுமே எந்த ஒரு கலையும் நம்மிடம் வந்து நிரந்தரமாக நிலைக்கும். விமர்சனங்களின் மூலம் மன சோர்வடைந்து விலகளைவிட, வருகின்ற விமர்சனங்களை நேர்மறையாக மாற்றி இன்னும் சிறப்பாக வெளிப்பட வேண்டும். அப்படிச் செய்தால் விமர்சனங்கள் பாராட்டாக மாறும்.  என் வாழ்வில் இது போன்ற சம்பவங்கள் நிறைய நடந்ததுண்டு. திட்டு வாங்கிவரிடம் தான் அதிமான பாராட்டுகளும் வாங்கியிருக்கிறேன்.


இதை எழுதும் போது சுப்புடு என பரவலாக அறியப்பட்ட பி.வி.சுப்ரமணியம் நினைவுக்கு வருகிறார். இந்தியாவைச் சேர்ந்த இசை, நடன விமர்சகர். த ஸ்டேட்ஸ்மேன் - The Statesman எனும் ஆங்கிலப் பத்திரிகையில் இசை, நடனம் குறித்த விமர்சனங்களை ஏறத்தாழ 60 ஆண்டுகள் எழுதியவர். தமிழ்ப் பத்திரிகைகளிலும் இசை விமர்சனங்கள் எழுதினார். அரைமண்டி இல்லை, தவறான பாவம், முத்திரைகளின் பிழைகளை, அவஸ்வரங்களைக் குறித்த விமர்சனங்களை மிகக் கூர்மையாகக் கவனித்து எழுத கூடியவர். இந்தியாவில் நடக்கும் பிரபல நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவர். பெரிய ஜம்பவான்களும் அவர் வருகையைக் கண்டு பயப்படுவதுண்டு. மறுநாள் காலையில் அவருடைய விமர்சனங்களைப் படிக்க பிரபல நாட்டிய கலைஞர்களும் சங்கீத வித்துவான்களும் ஆவலுடனும் பயத்துடனும் காத்திருப்பார்கள். சுப்புடுவின் வருகையை பல வித்துவான்கள் தடை செய்ததும் உண்டு. சுப்புடுவுக்கு அவ்வளவு பயமும் மரியாதையும் இன்னமும் உண்டு. சுப்புடுவின் விமர்சனங்களைப் படித்துதான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் குருவையே தேர்ந்தெடுப்பார்கள். சுப்புடுவின் கடுமையான விமர்சனம் நாட்டியக் கலையையும் சங்கீதத் துறையையும் ஒரு போதும் முடக்கவில்லை. அவரின் விமர்சனத்தால் நாட்டியக் கலையும் சங்கீதமும் வளர்ந்தது. கலைஞர்கள் மேலும் உழைக்க ஆரம்பித்தார்கள். எந்தக் குருவும் மாணவர்களை ஏமாற்றவில்லை. உலக தரத்திற்கு இந்திய நாட்டியமும் சங்கீதமும் பரவியதற்கு சுப்புடு ஒரு பெரிய தூண்டுகோளாக இருந்தார்.

ஆக, விமர்சனம் என்பதை ஏற்பதும் நிராகரிப்பதும் கலைஞரின் உரிமை. அதன் மூலம் சோர்ந்து போகாமல் தொடர்ந்து செயல்பட்டால், நம்மிடமிருந்து வெளிப்படும் கலை அதற்கான இடத்தைத் தேடி சென்றடையும்.


No comments:

Post a Comment