2022-02-03

இசையும் வரியும் | கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

இசையும் வரியும்



தியாகராஜ சுவாமிகள் இயற்றிய ‘கலிகியுண்டேகதா’ எனும் கீரவாணி ராகத்தில் அமைத்த ஒரு புகழ் பெற்ற தெலுங்கு கிருதியைச் சங்கீத ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார். அன்றையச் சங்கீத வகுப்பு கீரவாணி ராகத்தால் சுவாரசியமாக இருந்தது. ஆனால் என் மனதில் நிறைய குழப்பம்; கோபம். சங்கீத வகுப்பு தொடங்கும் முன் அம்மா என்னைத் திட்டியிருந்தார். என்னைத் திட்டினால் கூட பரவாயில்லை என் நண்பன் ராஞ்சையையும் கடுமையாகப் பேசியிருந்தார்.


சங்கீத வகுப்பு முடிந்ததும், அம்மாவின் கண்களைப் பார்த்தேன். கண்களில் கோபம் இல்லை. ஆசிரியர் வருவதற்கு முன்பு ‘பாடும் பறவைகள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கீரவாணி’ என்ற சினிமா பாடலை நண்பர்களுடன் சேர்ந்து பாடியதால் அம்மா அடைந்த கோபம் கொஞ்சம் தணிந்திருந்தது. ஆனால் சினிமா பாடலைப் பாடிய விவகாரம் வீட்டிற்குச் சென்றும் தொடரும் என எனக்குத் தெரியும்.


வழக்கம் போல சங்கீத வகுப்பு முடிந்து அனைவரும் பூஜையில் கலந்து கொண்டோம். பள்ளி வீட்டுப் பாடங்கள் நிறைய இருந்ததால், அம்மாவைச் சீக்கிரம் கிளம்ப சொன்னேன். அம்மா குருக்கள் கொடுத்த கோயில் பிரசாதத்தைக் கையில் வைத்திருந்தார். அம்மாவை அவசரப் படுத்தினால் சினிமா பாடலைப் பாடியதற்குத் திட்டு வாங்குவதிலிருந்து தப்பிக்கலாம் என தோன்றியது. கீரவாணி ராகத்தால் ஏற்பட்ட தாக்கத்தை அம்மாவிடம் திட்டு வாங்கி வீணாக்கி விடக்கூடாது என நினைத்துக்கொண்டேன். மனதிலும் மூளையிலும் கீரவாணியின் அதிர்வை உணர்ந்தேன். உள்ளிருந்து கீரவாணியை மீட்டெடுக்க தனிமை தேவைப்பட்டது. பெரும்பாலும் தனிமையில் இருக்கும் போதெல்லாம் என் மூளைக்குள் ஏதேனும் பாடல் ஓடிக்கொண்டே இருக்கும். எந்தத் தொழில்நுட்பமும் இல்லாமல் பாடல் அப்படியே கேட்கும்.



வாகனம் ஓட்டிப் பழகும் அண்ணன், மலைக்கு மேலிருக்கும் முருகன் கோயிலுக்கு கொஞ்சம் மெதுவாகத்தான் ஓட்டி வருவான் என தெரியும். காத்திருக்கும் நேரத்தில், கீரவாணி ராகம் சிந்தை முழுக்க இருந்தது. எஸ்.பி.எம் தேர்வுக்காக விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தான் அண்ணன். மூளைக்கும் மனதிற்கும் ஓய்வுக் கொடுக்க அவ்வப்போது அப்பாவின் பழைய புரோட்டோன் சாகா வண்டியை ஓட்டுவான். எஸ்.பி.எம் தேர்வு முடிந்ததும் என் முழு நேர வாகன ஓட்டுனராக ஆகச் சொல்லியிருந்தேன்.


அண்ணன் வந்ததும் ரகசியமாக இளையராஜாவின் கீரவாணிப் பாடலின் ஆலாபனையைப் பாடிக் காட்ட நினைத்திருந்தேன். நான் பாடும் எல்லாப் பாடல்களையும் சலிக்காமல் கேட்பான். அவனுக்கு வேறு வழியில்லை காரணம் தேர்வு எழுத போவதால் வீட்டின் தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பயன்பாட்டை அம்மா குறைத்திருந்தார். அண்ணன் என்னைப் போல இல்லை. அதிகம் பேச மாட்டான். சதா படித்துக் கொண்டே இருப்பான். அம்மா கோயில் குருக்களுடன் பிரதோஷத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். காற்று பட்டு பாவாடையைப் பறக்கச் செய்தது. வீசும் காற்றின் ஓசை உள்ளிருந்து கேட்டும் கீரவாணி ஒரு வகையான நிம்மதியைக் கொடுத்தது.



மலை மேட்டில் எங்கள் வண்டியின் ஓசை கேட்டது. அதைப் பழைய எஞ்சின் சத்தம் என அண்ணன் கூறுவான். இயந்திரம் மற்றும் இரசாயன சக்தியால் வெளிப்படும் ஓசை உள்ளிருந்து வந்த கீரவாணியின் அதிர்வைக் குறைத்தது.


வண்டியில் ஏறியதும் இளையராஜாவின் கீரவாணி பாடலின் ஆலபானையைப் பாடுவதற்குள், அம்மா கோயிலிருந்து வெளியேறினார்.


“ஏன் உன் மூஞ்சி சரியில்ல?” என்றான் அண்ணன் .


“இன்றைக்கு வீட்டில் எனக்குக் கச்சேரி இருக்கு” என்றேன்.


“ஏன்? என்ன பண்ணெ? சும்மா இருக்க மாட்டியே? ஒழுங்க பாடுலயா? டிச்சர் ஏசுனாங்களா?” என பல கேள்வியைக் கேட்டான்.


அம்மாவின் கோபம் அவனையும் பாதிக்கும். அம்மா கோவமா இருக்கிறாரா என அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா குருக்களிடம் பேசிய அதே பாணியில் அண்ணனிடம் “வந்துட்டியாடா? கெமிஸ்டரி எல்லாம் படிச்சு முடிச்சிட்டியா?” எனக் கேட்டார் அம்மா.


கெமிஸ்டரியைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது அம்மாவுக்கு ஆனால் நாங்கள் இருவரும் என்ன செய்கிறோம் என்பதை எல்லாம் தெரிந்து வைத்திருப்பார். அது எப்படி சாத்தியம் என இதுவரை எனக்கு தெரியவில்லை. எங்களைத் தவிர வேறு சிந்தனையே இருக்காது. நான் முடிந்ததும் அண்ணன்; அண்ணன் முடிந்ததும் நான்.


“கெமிஸ்டரி டாப்பிக் கவர் பண்ணிட்டேன். இனிமேல் பாஸ்ட் இயர் கேள்வியைதான் செய்யனும். நேரம் பத்தமாட்டிங்குது” என்று சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்டினான்.


“பசிக்குதாடா?” என்றார் அம்மா. அந்தக் கேள்வியை என்னிடம் கேட்கவில்லையென கொஞ்சம் கடுப்பு வந்தது. சூழ்நிலை சரியாக இல்லை. அதனால் அமைதியாக இருந்தேன். அண்ணனைவிட அம்மா என்னுடன்தான் அதிக நேரம் செலவிடுவார். அதனால் அண்ணனிடம் அம்மாவுக்கு எப்போதும் கொஞ்சம் இரக்கம் உண்டு. அவர் கூடவே இருப்பதால் என்னைக் கண்டுக் கொள்ளாத மாதிரியிருக்கும். ஆனால் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருப்பார்.


“மெதுவா ஓட்டுடா, காலையிலிருந்து மழ, ரோடு வழுக்கும்” என்றார் அம்மா.


“மா, கர்ண மாமா வீட்டிற்கு வந்திருக்கிறார். பசிக்குதாம். அம்மாவை அழைத்து வந்ததும் சாப்பிடலாம் எனச் சொல்லிவிட்டு வந்தேன். சீக்கிரமா போலாம். மாமா காத்துகிட்டு இருப்பார்” என்றான் அண்ணன்.


தலை பிரசவத்திற்காக அத்தை அவரின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருப்பதால் அவ்வப்போது கர்ண மாமா வீட்டில் வந்து சாப்பிடுவார். அவருக்கு அம்மாவின் சமையல் ரொம்ப பிடிக்கும். அதுவும் இன்று அவருக்குப் பிடித்த வெந்தயக் குழம்பு. வெந்தய குழம்பு வைத்தாலே கர்ண மாமாவுக்குத் தொலைப்பேசியில் அழைத்து தெரிவித்து விடுவார் அம்மா.


குழந்தை எப்போது பிறக்கும் என மாமாவிடம் கேட்க வீட்டை அடைந்தவுடன் வண்டியிலிருந்து முதலில் இறங்கி படியில் ஓடினேன். ஓடிவரும் சத்தத்தைக் கேட்டு கர்ண மாமா, “சங்கீத வகுப்பு முடிந்ததா? காலையிலிருந்து மழை ஏன் குளிர் சட்டைக்கூட போடாமல் போயிருக்க. சளி பிடிக்கப் போவுது” என்றார். சுகாதார துறையில் பணி புரியும் மாமாவிற்கு வீட்டில் எல்லோரின் ஆரோக்கியத்தின் மேலும் கவனம். மாலை 6 மணிக்கு மேல், வெளியே செல்ல வேண்டுமென்றால் கண்டிப்பாகக் குளிர் சட்டை, காலுறை மற்றும் தொப்பியை அணிந்து செல்ல வேண்டும் என்று கண்டிப்பார். பனி உடலில் பட்டால் நெஞ்சு சளி உண்டாகும் பிறகு ஆஸ்துமா, சளி போன்ற உபாதையெல்லாம் வரும் என்பார். கேமரன் மலையில் அதிகமானவர்களுக்கு இது போன்ற உடல் நலத்தில் பிரச்சனை இருக்கும். எனக்கு வந்தால் ஆடுவதிலும் பாடுவதிலும் சிரமம் ஏற்படும். எனவே, என்னைப் பார்க்கும் போதேல்லாம் இதை நினைவுறுதித்திக் கொண்டேயிருப்பார். வீட்டில் எல்லோருக்கும் நான் ஆடுவதையும் பாடுவதையும் பார்ப்பதில் அவ்வளவு இஷ்டம். அதற்காக எல்லோரும் என் மேல் கொஞ்சம் கூடுதலாகக் கவனம் செலுத்துவார்கள்.


அவரைக் கொஞ்சம் வெறுப்பேற்ற, குளிர் சட்டைப் போட்டால், பட்டுப் பாவாடையின் அழகு தெரியாது மாமா என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.


இந்த வயதில் என்ன அழகு வேண்டிக்கிடக்கு. உடல்நலம் தான் முக்கியம் என்று என்னைக் கொஞ்சம் எச்சரித்தார்.


அம்மாவின் நடையில் அவரசம் தென்பட்டது. மாமாவைக் கவனிக்கையில் சினிமா பாடலைப் பாடியதை அம்மா மறந்திருக்கக்கூடும் என மனம் சந்தோஷப்பட்டது. அண்ணன்  மீண்டும் படிக்கத் தொடங்க அறைக்குள் சென்றான். “சாப்பிட்டுப் படிடா,” என்று சமையறையிலிருந்து அம்மா அண்ணனிடம் சொல்லிக் கொண்டே உணவுகளைச் சுட வைத்தார்.


சங்கீத வகுப்பு முடிந்ததும் குளித்து விட்டு, இரவு உணவு சாப்பிட்டப் பிறகுதான் பள்ளி வீட்டுப் பாடங்களைச் செய்ய உட்காருவேன். ஆனால் 8 மணிக்குக் கேமரன் மலையில் குளிப்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். குளித்தப் பிறகு, உடல் மீண்டும் உஷ்ணமாகக் குளிர் சட்டை, காலுறை, ஷால் போன்ற எல்லா வகையான உடைகளையும் அணிய வேண்டும். அதுவும் மாமா வந்திருக்கிறார். 6 மணிக்குமேல் குளித்தால் திட்டுவார். தவிர்க்க முடியாத காரணமாக இருந்தால் குளித்தப் பிறகு கண்டிப்பாக பாதத்திலும் நெஞ்சிலும் விக்ஸ் தடவ வேண்டும். விக்ஸ் வாசம் வீசுகிறதா என முகர்ந்தும் பார்ப்பார். விக்ஸ் வாசம் என் முகத்தைச் சுளிக்க வைக்கும். தைலம், விக்ஸ் போன்ற எந்த திரவத்தையும் என் மேல் போட்டுக் கொள்ள விரும்பமாட்டேன். இன்று வேறு வழி இல்லை. அதனால் குளிக்கும் முன் அதையெல்லாம் தயார் செய்து குளிக்கச் சென்றேன்.


அம்மா, சுட வைத்த உணவில் ஆவி பறந்தது. மாமா, ‘வாணி வரட்டும்’ என்று சொல்லி அண்ணனுடன் அமர்ந்திருந்தார். அம்மா, அண்ணன்  மற்றும் மாமா பேசுவதை ஒட்டுக் கேட்டுக் கொண்டே குளித்துக் கொண்டிருந்தேன்.


“எப்படி படிப்பெல்லாம் போது, உன் ரிசல்ட்டதான் எல்லோரும் எதிர்ப்பார்த்துக் காத்துக்கிட்டு இருக்கோம். நல்லா செய்டா” என்றார் மாமா.


“கண்டிப்பா மாமா,” என உறுதியாளித்தான் அண்ணன் .


“எனக்கு இவன நினைச்சி பயமேயில்ல, இவன் எப்படியும் படிச்சி வந்திருவான். வாணிய நினைச்சாதான் பயமா இருக்கு” என்றார் அம்மா.


“ஏன் அக்கா, அவளுக்கு என்ன, அவளும் நல்ல படிக்கிறாதானே” என அம்மாவைச் சமாதானப் படுத்தினார் மாமா.


“அவ இன்னைக்குச் கோயில்ல என்ன பண்ணா தெரியுமா?  சினிமா பாட்ட பாடிக்கிட்டு இருந்தா… மே பேங்கில் வேல செய்யும் அஷோக்குமார் பையனோடு. அந்தப் பையன் இவள பார்த்து இரவிலே கனவிலே பாட வா நீ… ன்னு பாடுறான் கர்ணா. இவளும் அந்தப் பையனோட சேந்துக்குட்டு பாடுற. அவள என்னானு கேட்டுட்டுப் போ” என்றார் அம்மா.


அண்ணன்  குதர்க்கமாகச் சிரிப்பது குளியலறை வரைக்கும் கேட்டது. உடல் முழுக்க வெப்பமானது. வெந்நீரில் குளிப்பதால் இல்லை. அம்மா சொன்ன வார்த்தையால் அதுவும் மாமாவிடம் சொன்னது அவமானமாக இருந்தது.


“என்ன வாணி! அம்மா என்னமோ சொல்லுறாங்க” என மாமா கொஞ்சம் அதட்டலாகக் கேட்டார். அந்தக் குரல் குளியலறை வரை கேட்டது.


பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல் குளியலை வேகமாக முடித்து குளியறையிலிருந்து வெளியே வந்தேன்.


“அம்மா, ராஞ்சை என்னைப் பார்த்து பாடினான்னு நினைச்சிட்டிங்களா?” என கத்திக் கேட்டேன். மாமாவிற்கு என்னுடைய உரத்த குரல் ஆச்சிரியப்படுத்தியிருக்கலாம். ஆனால், மாமா வீடு திரும்பும் வரை காத்திருக்க முடியாதெனத் தோன்றியது.


“அம்மா, முதல்ல ராஞ்சை என்னைப் பார்த்து அந்தப் பாடலைக் பாடலனு ஒங்களுக்குத் தெரியனும். அவன் கீரவாணி ராகத்தில உள்ள ஒரு சினிமா பாடலைத்தான் பாடினான். நாங்கள் பாடிய பாடலின் அர்த்தத்தைப் பற்றியெல்லாம் யோசிக்க எங்களுக்கு நேரம் இல்ல. ராஞ்சைக்குக்கூட அவன் பாடிய பாடலின் அர்த்தம் தெரிந்திருக்காது. நாங்கள் கேட்டதும் பாடியதும் கீரவாணி ராகத்தில் அமைந்த ஒரு சினிமா பாடலை. எப்படி நீங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?” எனக் கொஞ்சம் அதட்டலாகக் கேட்டேன்.


அம்மாவிடம் அப்படி பேசுவது அதுதான் முதல் தடவை. அவர் நான் கோயிலில் சினிமா பாடலைப் பாடியதனால்தான் கோவப்பட்டார் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதனின் பொருளைக் கேட்டுதான் அவருக்கு என்மேல் கோவம் வந்ததென அவர் பேசியப் பிறகுதான் தெரிந்தது. பாவம் ராஞ்சை செய்யாத தப்புக்குத் திட்டு வாங்கிக் கொண்டான்.


“வாணி, அம்மாவிடம் அப்படி பேசதே. எல்லா அம்மாக்களுக்கும் இருக்கும் பயம் தான்” என்றார் மாமா.


“மா, வாணி சொல்லுற மாறிதான் இருக்கும். அவன் வாணியைப் பார்த்து அந்தப் பாடலைப் பாடியிருக்க மாட்டான். அவனுக்கு சீன கேர்ள் பிரண்ட் இருக்கு” என அம்மாவிடம் சொல்லி சிரித்தான் அண்ணன் .


“இப்போ இந்த விஷயம் ரொம்ப முக்கியமா?” என பற்களைக் கடித்துக் கொண்டு அண்ணனைப் பார்த்துக் கூறினேன்.


“ஆமாதானே, ராஞ்சை சீன பிள்ளைக்கூட டேட்டிங் போறத பார்த்திருக்கேன்” என்றான் அண்ணன். அந்த வயதில் நண்பர்களின் காதல் ரகசியத்தைக் கட்டிக் காப்பது முதன்மையான வேலையாக இருக்கும். அண்ணன்  தேவையில்லாமல் அவனின் தனிப்பட்ட விஷயத்தைப் பேசுகிறான் என மேலும் கோவம் வந்தது.


“சீனப் பிள்ளையாடா?” என மாமா கேட்டுச் சிரித்தார்.


“அம்மா! இதையெல்லாம் போய் அவன் அம்மாகிட்ட சொல்லிகிட்டு இருக்காதிங்க” என அம்மாவை மீண்டும் அதட்டினேன். அம்மா என்னை உற்றுக் கவனித்துக் கொண்டே இருந்தார். கோவமாக இருக்கிறார் என தெரிந்தது.


“சரி அவன் கேர்ள் பிரண்ட் கத இருக்கட்டும். அவன் ஒன்ன பார்த்து பாடுலனா, ஏன் அந்தப் பாட்ட பாடின? எத்தனையோ பாடல்கள் இருக்கையில் ஏன் அந்தப் பாடலைக் குறிப்பிட்டுப் பாடனும்? வாணி… வாணினு உன் பேர் வரனாலதானே…” என்றார் மாமா. மாமாவின் அறிவு திறனை நினைத்து வியந்து போய் ஒன்றும் சொல்லாமல் தலைமேல் கையை வைத்து நாற்காலியில் உட்கார்ந்தேன். அண்ணன்  தொடர்ந்து குதர்கமாகச் சிரித்தவாறே இருந்தான். மாமா என்னைக் கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு தன்னுடைய அறியாமையை நிரூபித்துக் கொண்டிருந்தார்.


“மாமா, சங்கீத டீச்சர் கீரவாணி ராகத்தைச் சொல்லிக் கொடுத்தார். இந்தப் பாடல் கீரவாணி ராகத்தில் அமைந்தப் பாடலாம். இளையராஜா நிறைய கீரவாணி ராகத்தில் சினிமா பாடல்களை இசையமைத்துள்ளாராம். ராஞ்சைப் பாடிய கீரவாணி பாடல் சுவரங்கள் கொண்ட ஒரு அருமையான ஆலாபனையில தொடருது. நாங்கள் சங்கீதம் பயில்வதால் இந்த மாதிரியான ஸ்வரங்களில் தொடரும் பாடல்கள் மற்ற பாடலை விட எங்களை அதிகமாக ஈர்க்கும். அதனால்தான் ராஞ்சை அந்தப் பாடலைப் பாடினான். நாங்கள் கீரவாணியின் ராகத்தைதான் கேட்டுப் பாடினோம் மாமா. அந்த வரி என்ன பொருள் கொண்டு வருகிறது என்பது எல்லாம் எங்களுக்குத் தெரியாது மாமா” என மிகவும் பணிவாக விளக்கினேன்.


“அது எப்படி ஒரு பாடலின் ராகத்தைதான் கேட்டோம் வரிகளை இல்லை எனச் சொல்லுகிற? எனக்கு இது புதுசா இருக்கு” என மாமா வியப்பாகக் கேட்டார்.


“ஆமாம் மாமா, ஒரு பாடல் கருத்தைப் பிரதிபலிக்கிறது. கருத்தைப் பிரதிபலிக்கும் வரிகளை நாங்கள் கேட்பதில்லை. இசையைக் கேட்கிறோம். இசை மன உணர்வைப் பிரதிபலிக்கிறது மாமா. இந்தப் பாடல் கீரவாணி ராகத்தில் அமைந்தது, கீரவாணியை கேட்டுக் கொண்டே இருந்தால் கருணை பிறக்குமாம் மாமா” என்றேன்.


“கர்ணா நீ சாப்பிடு, அவ செய்த தப்பை ஞாயப் படுத்துறா” என அம்மா சொல்லிக் கொண்டே மாமாவுக்கும் அண்ணனுக்கும் தட்டில் சாதத்தைப் போட்டார்.


“இருங்கக்கா அவ என்னமோ சொல்லுற… என்னானுதா கேட்போமே” என மாமா தொடர்ந்துப் பேச வாய்ப்பளித்தார். அம்மா அப்படிதான். என்னை நிறைய இடங்களில் பேச விடமாட்டார்.


“நீ சொல்லு வாணி” என மாமா கேட்டுக் கொண்டே வெண்டைக் காய் பொறியலைச் சாப்பிட்டார். அம்மா பரிமாறிய சாதத்தில் சூடு பறந்தது. குளிர் இடத்தில் வசிப்பதால் உணவைச் சுட சுடச் சாப்பிடுவது வழக்கம். இல்லையேல் உணவு சில்லென்று இருக்கும். சுவைக்காது.


மாமா பசியில் இருப்பார் என நினைவுக்கு வந்தது. “முதல்ல சாப்பிடுங்க மாமா அப்புறம் பேசலாம்” எனக் கூறினேன்.


“சாப்பிட்டுக் கிட்டே பேசலாம். நீயும் சாப்பிடு” என்றார் மாமா.


அம்மா சாப்பிடாமல், மாமாவிற்கும் அண்ணனுக்கும் பரிமார மேசைக்குப் பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தார். அவர் கண்கள் என்னை அலட்சியம் செய்தது. உணவு பரிமாறுதல் எல்லாம் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. அம்மாவின் பார்வையில் பெண்கள் அதை நினைத்துப் பார்க்கவே கூடாது. நாம்தான் நமக்கு வேண்டியவற்றை போட்டு சாப்பிட வேண்டும். எனக்கான உணவை நானே பரிமாறிக் கொண்டேன். சட்டென்று உடல் குளிரெடுத்தது. குளியலுக்குப் பின் உடலை உஷ்ணப்படுத்த காலுறையும் குளிர்சட்டையும் போடவில்லை. கீரவாணியால் எல்லோரும் அதை மறந்திருந்தனர்.


“இசை உணர்வைப் பிரதிப்பலிக்குது; பாடல் கருத்தைப் பிரதிப்பலிக்குது… அப்புறம்” என மாமா கேட்டார்.


“முதல்ல உங்களுக்கு இசையும் பாடலும் ஒன்றில்லையென தெரியுமா மாமா? அது வேற இது வேற” என்றேன்.


“ஆமா, வேற வேறதான். இசை ஒலி சம்பந்தமானது, பாடல் மொழி சம்பந்தமானது” என மாமாவைப் பார்த்து அண்ணன் சொன்னான்.


தவறாக புரிந்து கொண்டிருக்கும் அம்மாவிற்கு விளக்கம் என் மூலம்தான் கொடுக்க வேண்டும் என நினைத்து, “நீ கொஞ்சம் சும்மா இரு, மாமா என்னிடம் தான் கேட்டாரு” என அண்ணனைப் பேசவிடாமல் தடுத்தேன்.


“மாமா, இசையைக் கேட்க முடியும்; உணரமுடியும்; இசைக் கருவிகளினால் உருவாக்க முடியும். ஆனால் அதைப் பாட முடியாது. இசையைப் பாட வேண்டுமென்றால் அதற்கு வார்த்தைகள் வேண்டும். அப்போதுதான் பாட முடியும். வார்த்தையில்லாமலும் இசையைக் கேட்கலாம் மாமா. ஆனால் மனிதர்களின் மூளை முதலில் பாடலிலுள்ள வார்த்தைகள் கொண்டு வரும் கருத்தைப் பற்றிதான் யோசிக்கும். சங்கீதம் தெரிந்தவர்கள் ஒரு பாடலிலுள்ள ராகத்தைதான் முதலில் கேட்பார்கள். வார்த்தைகளைக் கேட்கவே மாட்டார்கள்” என்றேன். பலமுறை கேட்ட பிறகு, கீரவாணி ராகத்தைப் பாடனும் போல இருந்தது. அதான் பாடினோம் மாமா. அம்மா அந்தப் பாடல் வரிகளைக் கேட்டு, அது கொண்டு வரும் அர்த்ததைக் கேட்டு எங்களைத் திட்டிட்டாங்க. கோயில சினிமா பாடலைப் பாடியது தவறுதான் மாமா. அதற்கு அம்மாவிடம் வேண்டுமானால் சோரி சொல்றேன் என அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டேன்.


மாமாவிற்குச் சொல்லும் விளக்கம் அம்மாவையும் சென்று அடைந்தது. ஆனால் அவர் கண்களில் இன்னும் கோபம் இருந்தது.

“மாமா, உங்களுக்குத் தெரியுமா… இசை மனதில் உணர்வை வெளிப்படுத்தும் அதற்கு மொழி தேவையில்லை. அதிகமானோர் பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டு இசையைக் கேட்பதாகப் பேசுவார்கள். இசையைக் கேட்க வேண்டுமென்றால் அதில் வார்த்தை இருக்கக் கூடாது; அப்படி வார்த்தையிருந்தால் மூளை அதன் பொருளைதான் கேட்கும் இசையைக் கேட்காது. மாமா, இசையை மட்டும் கேட்க பழகிட்டீங்கனா, பாடலைக் கேட்க மாட்டிங்க, ஏன்னா அந்த மனசு  அப்படியிருக்கும். நீங்க அண்ணன் வைத்திருக்கும் ஜக்கிர் உசேனின் தபேலா கேசட்ட எடுத்துட்டுப் போயி கேளுங்க” என்றேன்.


மாமா சாப்பிட்டு முடித்திருந்தார். மாமாவின் தட்டை அவர் எடுக்கும் முன் நானே எடுத்து கழுவினேன். இல்லையென்றால் அதற்கும் அம்மாவிடமிருந்து திட்டு வாங்க வேண்டும்.


“வெறும் இசையை மட்டும் என்னானுக் கேட்பது?” மாமா ஆச்சிரியமாகக் கேட்டார்.


“இசையும் பாடலும் வேறு வேறு திசையை நோக்கி பயணிப்பவை மாமா. பாடல் ஒரு தொடர்பு கருவி. ஒரு கருத்தைக் கூறுவது. இசை ஒலி சம்மந்தமானது. ஒலி ஒரு வகையான அதிர்வைக் கொண்டு வரும். அந்த அதிர்வு மனதில் உணர்வை ஏற்படுத்தும். அந்த உணர்வுதான் மாமா இசை. அத நீங்க உணர்ந்துட்டா, எங்கையோ போயிருவீங்க மாமா. என்னென்னமோ தோனும். இதயம் வேகமாக துடிக்கும், உடல் சிலிர்க்கும், சிரிப்பு வரும், அழுகைக் கூட வரும் என்றேன். நான் அந்த இசையைதான் கேட்கிறேன் மாமா “என்று மீண்டும் நினைவுறுத்தியது அம்மாவுக்காக. அம்மாவின் கண்களிலும் செயலிலும் மாற்றம் தெரிந்தது.


“சரி, இனி இசையை மட்டும் கேட்டுப் பழகுறேன்,  ஜக்கீர் உசேனின் தபெலா கேசட்ட கொடுடா” என மாமா உற்சாகமாகச் சொன்னார். “எனக்கு புரியுமானு தெரியல, இதுவரைக்கும் இசையை மட்டும் கேட்டதில்லை. எனிவேய்… ஐ வில் ட்ரை” என்றார்.


“மாமா, நீங்க இதுவரை கேட்டது இசையை இல்ல, பாடலில் உள்ள வாரிகளைத் தான். அது கொண்டு வரும் பொருளைத்தான் கேட்குறீங்க. இசையுடன் கேட்பதால் அதன் பொருள் சுலபமாகப் புரிகிறது. சுலபமாகப் புரிய வைக்க இசைக்கு சக்தி இருக்கு. பல பேர் இசை வழி வரும் பாடலின் பொருளைதான் கேட்கிறார்கள். காரணம் இசையுடன் வரும் கவிதையோஅல்லது பாடல் வரிகளோ உள்ளத்தை எளிதில் தொடும். பாடல் வரிகள் ஒரு உணர்வைக் கொண்டு வரும், இசையில் இருக்கும் ராகம் ஒரு உணர்வைக் கொண்டு வரும். அவை இரண்டும் கலந்து ஏற்படுத்தும் உணர்வு சிறந்தப் பாடலாக ஆகிறது. அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் இதற்கிடையில் வார்த்தைகள் கொண்டு வரும் பொருளுக்கு என்ன வேலை மாமா?”


‘ராகம் பிடித்திருந்தால், என்ன பாட்டு வேண்டுமானாலும் பாடுவேன்’ என அம்மா முன் சொல்ல தைரியம் இல்லை. இனிமேல் சினிமா பாடலைப் பாடவே மாட்டேனு அம்மாவின் முன் உறுதியளித்தேன். அம்மாவின் முகம் மலர ஆரம்பித்தது.


இந்திய சினிமாவில்தான் இன்னும் படங்களில் பாடல்கள் இருக்கின்றன. காரணம், இந்திய மக்களுக்கு பாட்டு வழி வரும் இசை வேண்டும். ஐரோப்பிய படங்களில் பாடலே இருக்காது. பின்னணி இசை அல்லது theme music தான் இருக்கும். உண்மையில் ஒரு படத்தின் கதையோட்டத்தில் பாட்டுக்கு ஒரு அவசியமும் இல்லை என அண்ணன்  மாமாவிற்கு சில ஒப்பீட்டைச் சொன்னான்.




“மாமா, when you’re happy, you enjoy the music but when you’re sad, you understand the lyrics எனும் கூற்றை ஒரு பிரபல அமெரிக்க பாடலாசிரியர் மற்றும் பாடகரான ஃப்ரன்க் ஒசென் (Frank Ocean) கூறியுள்ளார். மகிழ்ச்சியாக இருந்தால் இசையைக் கேட்பார்கள், கவலையாக இருந்தால் பாடலின் வரிகளைக் கேட்பார்கள். நீங்கள் முடிவு செய்யுங்கள் மாமா, மகிழ்ச்சியாக இருக்க போறீங்களா இல்லை கவலையாக இருக்க போறீங்களானு.”


அக்கா, பிள்ளைகள் பெரிசா ஆயிட்டாங்க. என்னென்னமோ பேசுறாங்க என மாமா சொன்னார்.


“மாமா, ஒரு ராகத்தைப் பயன்படுத்தி இசையை உருவாக்கும் இளையராஜா நல்லவர். ஆனால் அந்த ராகத்தை நல்ல பாடல், கெட்ட பாடல் என பொருள் வரும் வகையில் எழுதும் கவிஞர்கள் கெட்டவர்கள்” என நான் சொன்னதும் மாமா உரக்க சிரித்தார். அம்மாவின் முகத்திலும் அதே சிரிப்பு வந்தது.


இதழ் 133
ஜனவரி 2022 
வல்லினம் கலை இலக்கிய இதழ்
https://vallinam.com.my/version2/?p=8097

No comments:

Post a Comment