2023-01-04

மண்டலா 2 | கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி




படிவம் நான்கில் அறிவியல் துறையில் (Science Stream) படிக்க தகுதியிருந்தாலும், கலையியல் துறையைத் (art stream) தேர்ந்தெடுத்திருக்கும் என்னை அடையாளம் காண டீச்சர் கோர் (Khor) அன்று வகுப்பறைக்கு வந்தார். அவர் கலைக் கல்வி பாட ஆசிரியர். ஒரு சிறந்த ஓவியரும் கூட. அவரின் சுவரோவியம் பள்ளி முழுதும் நிரம்பியிருக்கும். நான் கலையியல் துறையில் படிப்பைத் தொடர, டீச்சர் கோர் ஒரு முக்கியக் காரணம். அவர் பள்ளியில் வருடந்தோறும் நடத்தும் ஓவியக் கண்காட்சியில் தவறாமல் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவருடன் பேசியது இல்லை. அவருடன் பழகவும் நிறைய கலையியலைப் பற்றி உரையாடவும்தான் நான் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன். அறிவியல் அறைக்கு முன் அவர் சூரிய மண்டலத்தை மையப்படுத்தி வரைந்திருக்கும் நவீன ஓவியம் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஏதேனும் புதியதான ஒன்று தென்படும். அவரின் வண்ணக் கலவைகள் செய்முறை (colour mixing) என்னை அதிகம் ஈர்த்தது.










“கலையியல் பாடம் உன்னுடைய எதிர்காலத்திற்கு உதவாது. இந்தப் பாடங்களில் கவனம் செலுத்தி நேரத்தை வீணாக்காதே! இந்தப் பாடத்தைப் படிப்பதால், எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு இருக்காது,” என பல எதிர்வினைகள் என் சிந்தனையில் வந்து போனது. தேர்ச்சி மதிப்பெண் மீது எனக்கு எப்பொழுதும் கவலை இருந்ததில்லை. சிறு வயதிலிருந்தே எனக்கு என்ன தேவை என்பதில் நான் மிகவும் தெளிவாக இருந்திருக்கிறேன். பல ஆசிரியர்களின் ஆலோசனைகள், என் பெற்றோரின் வருத்தம், நண்பர்களின் கேலி என எதும் என் முடிவை மாற்றவில்லை. ஆசிரியர் தொழிலுக்கு இந்தத் துறை பொதுமானது என பெற்றோரை சமாதானப் படுத்தி படிவம் நான்கை கலையியல் துறையில் தொடர்ந்தேன்.


அன்று நீல நிற ஆடையில் டீச்சர் கோர் உற்சாகமாக வகுப்பறைக்கு வந்தார். எல்லா மாணவர்களின் கண்களிலும் அதே உற்சாகம். முதல் நாள், முதல் வகுப்பு, அப்படிதான் இருக்கும். முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் என்னை, அடையாளங்கண்டு ஒரு சிறிய புன்னகையுடன் என் அருகில் வந்தார். அவர் என்னை எளிதில் அடையாள காண்பார் என எனக்குத் தெரியும்.


டீச்சர் கோர் எங்கள் குடும்ப நண்பரும் கூட. அவரின் தாத்தா மின்சார கடை வைத்திருந்தார். டீச்சர் பள்ளி முடிந்ததும் அவரின் தாத்தாவிற்கு உதவியாகக் கடையில் இருப்பார். அவரின் கடையும் எங்களின் கடைவீடும் ஓரே வரிசையில்தான் அமைந்திருந்தன. மாலை நேரங்களில் நண்பர்களுடன் கடைவீதியில் விளையாடும்போது டீச்சர் அவரின் தாத்தாவின் கடையினுள் துணியில் ஏதேனும் வரைந்து கொண்டு இருப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அவரும் எங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரையும் நன்கு அறிந்து வைத்திருந்தார்.


“நீ தவறான துறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய் என ஆசிரியர் அறையில் உன் மீது நிறைய புகார்கள். நன்கு தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் அறிவியல் துறையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என எந்தச் சட்டமும் இல்லை. அது நாமே உருவாக்கிக் கொண்டது. அறிவியல் துறையில் படிப்பது ஒரு கெளரவம்போல ஆயிற்று. கொஞ்சம் உழைப்பும் தியாகமும் செய்தால், ஏட்டில் இருக்கும் அறிவியல் கணித துறையில் சிறந்து விளங்கலாம். ஆனால், கலையியல் துறை அப்படி இல்லை. இது ஒரு கலை. நிறைய படைப்பாற்றல் திறன் மற்றும் பலவகையான நுணுக்கங்கள் தேவை. கலையியல் கோட்பாடுகளை வைத்து புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும். சொல்லப் போனால், அறிவியல் துறையில் படிக்கும் மாணவர்களைவிட நாம்தான் சிறந்தவர்கள். ஒரு கலை யாரைச் சென்று சேர வேண்டுமோ, அவரைத்தான் சென்று சேரும். தனித்துவம் பெற்றவர்கள் மட்டுமே இதில் செயல் பட முடியும். நீ தேர்ந்தெடுக்கப்பட்டவள். பள்ளி நிகழ்ச்சிகளில் உன்னுடைய நாட்டியத்தைப் பார்த்திருக்கிறேன். உனக்கு கலையில் ஆர்வம் உண்டு. பிறரின் பரிந்துரைகளைக் காதில் போட்டுக்கொள்ளதே, உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய். எல்லா வடிவமான கலைக்கும் ஒரு சக்தி உண்டு. அது உன்னை வழி நடத்தும்,” என டீச்சர் கோர் என் முடிவை ஊக்குவித்தார். அவரின் ஆலோசனையைக் கேட்டு முதல் நாள் கலைக் கல்வி வகுப்பு மேலும் உற்சாகமானது. படிவம் நான்கு முழுக்க கலையியல் தான். வேறு எந்தப் பாடத்திலும் கவனம் போகவில்லை. கலையியலின் கோட்பாடுகளைப் படிக்க படிக்கக் அதன் மீதான ஆர்வம் கூடிக்கொண்டே போனது. டீச்சர் கோருடன் நட்பாகப் பழக நிறைய வாய்ப்பு கிடைத்தன. டீச்சர் கோர் கோட்பாடுகளை மட்டும் விளக்காமல் அதனை பல்வேறு வகையில் ஒப்பிட்டும் வரைந்தும் காட்டுவார். அவர் நீர் வண்ணத்தைப் பயன்படுத்தும் உத்தி அற்புதமாக இருக்கும். வண்ணங்களுடன் விளையாடுவது போல் இருக்கும்.


வழக்கம் போல அன்றை வகுப்பை உற்சாகமாக ஆரம்பித்தார் டீச்சர் கோர். சீன மாணவர்களிடைய கொஞ்சம் கூடுதல் உற்சாகம் காணப்பட்டது. வருங்கால வடிவமைப்பாளர்கள் மத்தியில் படிக்கிறோம் என பலமுறை நினைத்ததுண்டு. அவர்களின் ஓவியம் வரையும் திறன் மற்றும் கணிதத் திறமை என்னைப் பெரிதும் ஈர்க்கும். பெரும்பாலான சீன மாணவர்கள் கணிதம் மற்றும் ஓவியங்கள் வரைவதில் சிறந்து விளங்குவார்கள். அன்று டீச்சர் கோர் நடத்திய பாடம் இவை இரண்டும் சம்பதப்பட்டவைதான்.


சிறுவதிலிருந்தே மொழிப் பாடங்கள் எனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது. மொழிப் பாட ஆசிரியர்களைக் கண்டாலே பயந்து நடுங்குவேன். அதற்கு முக்கியக் காரணம் வாசிப்பு. மொழிப் பாடங்களுக்கு வாசிப்பு தேவை. நாட்டியம், சங்கீதம், யோகா, விளையாட்டு என ஓர் இடத்தில் உட்காராமல், சுற்றித் திரியும் என்னால் நீண்ட நேரம் உட்கார்ந்து வாசிக்க முடியாது. வாசிக்காததால் வாசிப்புத் திறன் சுமார்தான். நிறைய சொற்களஞ்சியங்கள் தெரியாது. அதனாலேயே மொழி பாட ஆசிரியர்களின் பல திட்டுகள் என்னை வந்து சேரும். ஆனால் கணிதமும் அறிவியலும் எனக்கு அப்படியல்ல. அவை இரண்டும் என் கண்கள் போன்றவை. நாட்டியம், சங்கீதம் மற்றும் யோகா வழி கணிதம் மற்றும் அறிவியலைப் பாடத்திட்டதிற்கு மேல் கற்றுக்கொண்டேன். நான் பள்ளிக்குச் சென்று கணிதத்தையும் அறிவியலையும் கற்றதைவிட பாடி, ஆடி, வீணையை மீட்டிதான் அதிகம் கற்றுக் கொண்டேன். நாட்டியமும் சங்கீதமும் கணிதத்தின் இன்னொரு சாயல். கணிதத்தை புதுமைப் படுத்தினால் அது நாட்டியம் மற்றும் இசையாக மாறும். ஏனென்றால் நாட்டியம் மற்றும் இசையின் ஜீவ நாடியே கணிதம்தான்.


தாளத்தை மையப்படுத்தித்தான் ஒரு பாடலைப் பாடவும் ஆடுவும் முடியும். ஒரு பாடலிலுள்ள தாளம் கணிதத்தைத்தான் பிரதிபலிக்கும். நாட்டியத்தில் வரும் ஜதிகளும் கணிதத்தைத்தான் சார்ந்து இருக்கிறது. தாளத்திற்கேற்ப ஆடுவதும் பாடுவதும் தாளத்தில் அமைந்திருக்கும் எண்களுக்கேற்ப ஆடுவதாகும். ஆக, எண்களுடன் சதா ஆடியும் பாடியும் இருப்பதால் ஏட்டில் இருக்கும் கணிதம் எனக்கு அத்துப்படி. ஆனால் இந்தக் கணிதம் கலையியலிலும் இருப்பது, டீச்சர் கோர் நடத்திய பாடத்தின் வழி பல மாணவர்களையும் என்னை உட்பட வியப்பில் ஆழ்த்தியது. டீச்சர் கோர், ஃபைபோனச்சி வரிசையைப் Fibonacci sequence பயன்படுத்தி, ஃபைபோனச்சி சுழல் Fibonacci spiral வரைவதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். சீன மாணவர்கள் ஃபைபோனச்சி வரிசை Fibonacci sequence எண்களையொட்டி நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தனர். நான் ஏதும் கேட்காமல் அமைதியில் இருந்தேன். எல்லாம் சிவமயம் போல, எல்லாம் கணிதமயம். இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும் தற்சயலாக உருவாகவில்லை, எல்லாம் கணிதமாகி, கணிதத்தால் உருவாகியிருக்கிறது. நாட்டியம் சங்கீதத்தில் மட்டும் கணிதம் வரவில்லை. ஓவியத்திலும் உள்ளது எனச் சிந்தனையில் நிறைய விடயங்கள் வந்த வண்ணம் இருந்தன.


ஒரு கலையை அடிப்படையிலிருந்துக் கற்கும் போது, அது மற்றொன்றுடன் தொடர்பு படுகிறது. பிறகு அந்தத் தொடர்புகளை ஆராயும்போது, அது முற்றிலும் வேறோன்றாக அறிமுகமாகும். பெரும்பாலான சமயங்களில் தொடர்புகளை ஆராயத் தொடங்கினால், கணிதம் தான் மிஞ்சும். சிறுவயதிலிருந்தே இந்த ஆச்சரியம் என்னைத் தொடர்ந்துக் கொண்டே வருகிறது. எதனைப் பார்த்து கற்ற வேண்டும் என நினைக்கிறோமோ, அதனை முதல் நாளிலேயே கற்றுவிட முடியாது. அந்தக் கலைக்கு எதிர்ப்பதமாக இருக்கும் வேறொன்றைதான் முதலில் கற்க வேண்டும்.


நாட்டிய வகுப்பில் முதல் நாள், குரு சமப் பாதத்தில் நிற்கவும், அரை மண்டியில் உட்காரவும், நாட்டிய பாணியில் நடக்கவும் சொல்லிக் கொடுத்தார். எண்ணிக்கைகளுக்கேற்ப நடக்க, சமத்தில் நிற்க, அரைமண்டியில் உட்கார என இப்படியே ஒரு மாதம் கழிந்தது. எப்போது ஒரு பாடலுக்கு நடனம் ஆட முடியும் எனக் குருவிடம் கேட்டப் போது, எப்பொழுது நான் சொல்லும் எண்களுக்கேற்ப ஒழுங்காக நிற்க, உட்கார, நடக்க முடிகிறதா அப்பொழுது என்றார். சங்கீத வகுப்பைத் தொடங்கியப் போதும் இதே ஆச்சிரியம்தான். ஸ்வரங்களைப் பாடுவதற்கு முன் சங்கீத ஆசிரியர் மூச்சுப் பயிற்சியில் சொல்லிக்கொடுத்தார். பாடுகையில் சுவாசிக்கும் உத்தி மிகவும் அவசியம், இல்லையென்றால் ஒரு பாடலை ராகத்திற்கேற்ப பாடமுடியாமல் மூச்சுத் திணற பாட வேண்டியிருக்கும். ஆக, முதல் மாதம் சங்கீத வகுப்பு எண்ணிக்கைக்கேற்ப மூச்சை தம் கட்டி விடும் பயிற்சியிலேயே போனது. இதே ஆச்சரியம் யோகாவிலும். உடல் உறுப்புகளை உபயோகித்து செய்யும் யோகாவைக் கற்பதற்கு முன், யோகா மாஸ்டர் சிந்தனையையும் மனதையும் ஒரு நிலை படுத்த பயிற்சி கொடுத்தார். மனமும் சிந்தனையும் ஒன்றிணைந்து உடல் உறுப்புடன் செயல்பட்டால்தான் அது ஆசனமாக மாறும். இல்லையேல் அது வெறும் உடல் நகர்ச்சி மட்டுமே என்று முதல் வகுப்பிலேயே யோகா மாஸ்டர் கூறினார்.


ஆக, சிந்தனையையும் மனதையும் ஒரு நிலை படுத்த ஒவ்வொரு வகுப்பிலும் தியானத்தின் நேரம் கூடிக் கொண்டே போனது. வீணை வகுப்பும் அதேபோலதான். வீணை ஒரு நரம்பு இசைக் கருவி. ஸ்வரங்களைப் பிரதிபலிப்பவை. ஆனால் வீணை ஆசிரியர் முதலில் தாள வகைகளைத்தான் சொல்லிக் கொடுத்தார். எண்களைப் பிரதிபலிக்கும் சப்த தாளங்களையும் அதன் உறுப்புகளையும் கற்று தேர்ந்தால் மட்டுமே வீணையை வாசிக்க முடியும் என அவரும் எதிர்பதமான திறனைதான் முதலில் அறிமுகப் படுத்தினார். சம்பந்தமேயில்லாமல் எதையோ செய்கிறோம் என்று பயிற்சி செய்யும் போதெல்லாம் தோன்றும். ஆனால், ஒரு கட்டடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியமானது தொடக்கக் கால பயிற்சிகள் என தீவிரமாக ஒரு கலையில் ஈடுபடும்போது தெரியவரும்.


பெரும்பாலான கலைகளின் தொடக்கக்கால பயிற்சிகள் அனைத்தும் எண்களையும் கணிதத்தைத்தான் சார்ந்திருக்கும். தையல், சமையல், சிற்பம், தற்காப்பு என கணிதத்தை சார்ந்திருக்கும் பல கலை வடிவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாவற்றிலும் கணிதம். அதில் ஓவியக்கலையும் ஒன்று. ஒன்றை வரைவதற்கு முன், முதலில் கோடு போட தெரிய வேண்டும் என புகழ் மாமா மண்டலா ஓவியத்தை வரையக் கற்றுக் கொடுக்கும் போது சொல்லியிருந்தார். வெறும் கோடுகளில் இத்தனை வகைகள் உண்டா என புகழ் மாமா சொல்லிக் கொடுத்தப்பின்புதான் தெரியவந்தது. கோடுகளையும் வடிவங்களையும் சம நிலையில் வரைய கணிதம் தேவை.


“கணிதத்தில் ஃபைபோனச்சி எண்கள் (fibonacci numbers) என்ற எண் தொடர் வரிசை உள்ளது. பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நிலைகளும் ஃபைபோனச்சி எண்களாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளன. பூவின் இதழ்களின் எண்ணிக்கையில், இலையிலிருக்கும் கோடுகளில், விதைகளின் எண்ணிக்கையில், பழத் தோலின் வரிவடிவங்களில், நம் கை ரேகைகளில், நமது காதின் சுழற்சியில், சூரிய மண்டலத்தில், வலைந்து காணப்படும் வாழைப் பழம் என இவையனைத்திலும் ஃபைபோனச்சி எண் வரிசையைப் (Fibonacci sequence) பயன்படுத்தி ஃபைபோனச்சி சுழல் (Fibonacci spiral) வழி உருவானவை.


1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144 – போன்ற எண்களின் தொடர்ச்சியைதான் ஃபைபோனச்சி வரிசை என அழைக்கப்படுகிறது. இது பக்கத்து எண்ணுடன் கூட்டிக் கொண்டு வளரும். அதை ஓவியமாக வரையும் போது கிடைக்கும் அமைப்பை ஃபைபோனச்சி சுழல் என்று சொல்வார்கள். எண்களின் வளர்ச்சிக்கு ஏற்ப முடிவில்லாத சுழற்சியை அது உருவாக்கிக் கொண்டு செல்லும். இந்தியர்கள் இந்தக் கணக்கைக் கட்டிட வடிவமைப்பில், ஓவியங்களில், ஒப்பனையில், சிற்பங்களில் பல்வேறு கோணங்களில் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். அதில் ஒன்றுதான் மண்டலா ஓவியம். ஆகையால் மண்டலாவை சும்மா ஒரு வட்டம் போட்டு, அதனூள் வரையும் ஓவியம் என நினைத்துவிட முடியாது. இதற்கு பின்னால் ஒரு பெரிய கணித கோட்பாடே அடங்கியுள்ளது என புகழ் மாமா சொன்னது நினைவுக்கு வந்தது.


மண்டலா ஓவியம் வரைபவர்கள் எல்லாம் ஜீனியஸ் என வரைய முயற்சிக்கும் போதெல்லாம் தோன்றும்.  வட்டத்தின் சுழற்சிக்கான எண்ணை தேர்ந்தெடுத்து அதன் படி கோடுகள் போட்டு அதனுள் வரைய ஆரம்பிக்க வேண்டும். வட்டத்துக்குள் வடிவியல் வடிவங்களைப் geometrical shapes பயன்படுத்தி வரைவது முக்கியமல்ல, கணக்கு தவறாமல் வட்டத்தையும் கோடுகளையும் போட வேண்டும். அப்படி போட்டால் மட்டுமே மண்டல ஓவியத்தில் அடைங்கியிருக்கும் அறிவியல் நுட்பங்கள் பிரதிபலிக்கும். இல்லாவிட்டால் அது வெறும் வடிவியல் ஓவியம் geometry drawing போலதான் இருக்கும். உலகிற்கு முதன் முதலில் மண்டல ஓவியத்தைத் தியானத்திற்காக அறிமுகம் செய்து வைத்த கெளதம புத்தருக்கு, கணிதத் திறனை கொஞ்சம் அதிகமாகக் கொடுத்து விட்டதோ போதிமரம் என நினைத்துக் கொண்டிருக்கையில் டீச்சர் கோர் என்னை அழைத்தார். சட்டென்று என்னுடைய நினைவழைகளிலிருந்து திரும்பினேன்.


‘என்ன சிந்தனையில் இருக்கிறாய்? ஃபைபோனச்சி எண்கள் fibonacci numbers புரிகிறதா?’ எனக் கேட்டார்.


‘பாடத்திட்டத்திற்கு மேல் புரியும்’ எனச் சொல்லி, புகழ் மாமா கற்றுக் கொடுத்ததை அப்படியே ஒப்புவித்தேன். டிச்சரின் கண்களில் ஆர்வம் தெரிந்தது. அவர் புத்த மதத்தைச் சேர்ந்தவர். புத்தர் உருவாக்கிய மண்டலா ஓவியத்தைப் பற்றி டீச்சரும் பிற மாணவர்களிடம் பகிர்ந்துக் கொண்டார்.


“புத்தருக்குத் தலைக்குப் பின்னால் உள்ள ஒளி வட்டம் மண்டலாவைதான் குறிக்கும். இதன் நோக்கம் பௌத்தர்கள் தியானத்தின் மூலம் தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தவும், புத்தரின் மைய உருவத்திற்கு செல்லும் பாதையைப் பின்பற்றவும் உதவுவதாகும்.”, எனத் தகவலைப் பகிர்ந்து கொண்டார்.


ஏற்கனவே தெரிந்த விஷயம், ஆனால் முதல் முறை கேட்பது போல முகத்தை வைத்துக் கொண்டேன். “மண்டலாவைப் பற்றி பேசினால் மட்டும் போதாது, அதை வரைய வேண்டும்” எனச் சொல்லி, டீச்சர் கோருடன் மண்டலாவை வரைய ஆரம்பித்தோம்.




No comments:

Post a Comment