2023-11-15

தாரா | கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

ஓவியர் ; Sulav Shakya


நேபாள் என்றாலே எனக்குப் புத்தர்தான் நினைவுக்கு வருவார். நேபாளத்தில் புத்தர் பிறந்த இடம் லும்பினி. லும்பினி அதற்கு மட்டும் பிரபலம் அல்ல. பல நாட்டு புத்த நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பௌத்த மடாலயங்கள் லும்பினியில் உள்ளன. அங்குச் சென்றால், ஒவ்வொரு நாட்டிலும் பௌத்த மத வழிபாடுகள் எவ்வாறு கடைபிடிக்கப்படுகின்றன என்பதைக் காணலாம். பெரும்பாலோர் புத்தர் வழிபாடு என்பதைப் போதனை அல்லது தியானத்தையொட்டியது என நினைக்கின்றனர். சிலர் அதில் உள்ள மந்திரங்களையும் சடங்குகளையும் கூட அறிந்து வைத்துள்ளனர். ஆனால், பௌத்தம் மாபெரும் நுண்கலைகளை உள்ளடக்கியது.



புத்தரை அணுகிச் செல்ல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதைகள் இருக்கின்றன. எனக்கு அவர் விட்டுச் சென்ற கலைகள்தான் அவரை அடைவதற்கான வழியாக உள்ளது. புத்தரை மண்டலா மற்றும் தங்கா ஓவியங்களின் மூலமாகவே நான் அணுகுகிறேன். சிறுவயதிலிருந்தே மண்டலா ஓவியம் வரைவதால் புத்தர் எனக்கு மிக அருகில் இருக்கிறார் என எப்பொழுதும் தோன்றும். அதைப் பலமுறை உணர்ந்தும் இருக்கிறேன். லும்பினியில் மண்டலா மற்றும் தங்கா ஓவியங்கள் பிரபலம் என்றும் அவை பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றை பார்ப்பதுதான் லும்பினி பயணத்தின் எனது முதன்மையான நோக்கமாக இருந்தது.



நீண்ட பயணத்தின் களைப்பு லும்பினி மண்ணை மிதித்ததும் பறந்து போனது. புத்தரின் தலைக்குப் பின் இருக்கும் ஒளி, லும்பினியில் பார்க்கும் இடமெல்லாம் பரவியிருந்தது. புத்தரின் மந்திர ஒளி லும்பினி முழுக்க ஒளித்துக் கொண்டிருந்தது. மனம் சிந்தனையெல்லாம் ஒரு நிலைக்குவியலில் அமைதியானது. உரத்த சிரிப்பு ஆடம்பரமாகத் தோன்றியது. உடலிலும் உள்ளத்திலும் புத்தர் முழுமையாக நிறைந்திருந்தார்.



காலை உணவுக்குப் பின் பயண வழிகாட்டியான கணேஷ், புத்தரைப் பற்றியும் பெளத்த சமயத்தைப் பற்றியும் மிக விரிவாக விளக்கினார். தன்னுடைய உரையில் “எல்லோரும் புத்தராகலாம். நீங்களும் புத்தராகலாம். அதன் வழிமுறை லும்பினியில் கிடைக்கும்.” என்றார்.



எல்லா கலை வடிவங்களும் இறைத்தன்மைக் கொண்டவை. கலைவெளிபாடு கடவுளை உணர வைக்கும்; கடவுளாக மாற்றவும் செய்யும். அறுபத்து மூன்று நாயன்மார்கள், மீரா பாய், போதிசத்துவர்கள் என இன்று கடவுளாகப் போற்றும் அனைவரும் ஆடி, பாடி, கடவுளின் புகழை எழுதிதான் மோட்சம் அடைந்திருக்கின்றனர். ஆக, நான் புத்தராக மாற நிறைய வாய்ப்பு உள்ளது என மனதுக்குள் கூறிச் சிரித்துக் கொண்டேன்.


லும்பினியில் இருக்கும் மடாலயங்களில் ஜெர்மன் மடாலயம் பிரபலமானது; மிக அழகானது. சுமார் 20 முறையாவது யூடியூப்பில் இந்த மடாலயத்தைப் பார்த்ததுண்டு. ஜெர்மன் மடாலய வாசலை நெருங்கியதும் மனதில் அளவில்லா மகிழ்ச்சி. உள்ளே நுழைய காலணிகளை அகறியவுடன்(அகற்றியவுடன்) லும்பினியின் வெப்ப நிலையை உணர்ந்தேன். சுமார் 40 டிகிரி வெப்பம் இருக்கும். வெப்பம் பாதத்தைச் சுட்டது. மிக விரைவாக ஓடினேன்.

ஜெர்மன் மடாலயம் முழுக்க புத்த பிக்குகள். அவர்கள் மந்திரங்களை ஜபித்துக் கொண்டு மிக நிதானமாக ஆலயத்தினுள் அடி மீது அடி வைத்து நடந்து சென்றனர். 40 டிகிரி வெப்பத்தில் எப்படி இவ்வளவு நிதானம் எனப் புரியாமல் அவர்களைத் தாண்டி கொதிக்கும் தரையின் வெப்பத்தைத் தவிர்க்க விரல் நுனிகளில் ஓடினேன். வாசலை அடைந்ததும் மூலஸ்தானத்தில் இருக்கும் புத்தரைக் கண்டு கொள்ளவில்லை. சட்டென்று மடாலயத்தின் வலது புறம் ஓடி, ஒரு பிரம்மாண்டமான தங்கா ஓவியத்தின் முன் நின்றேன். பலமுறை யூடியூப்பின் வழி பார்த்திருப்பதால் ஜெர்மன் மடாலயம் பழக்கப்பட்ட இடம் போல இருந்தது. உள்ளே அசாதாரண அமைதி.



சொர்க்கம் நரகம் எனும் கருவை மையப்படுத்தி பிரமாண்ட காலச் சக்கரம் ஒன்று தங்கா பாணியில் வரையப்பட்டிருந்தது. ஒவ்வொன்றையும் மிகக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். தங்கா ஓவியத்தை நேரில் பார்ப்பது அதுதான் முதன் முறை. அவ்வளவு பிரம்மாண்டமான ஓவியம் அது. அதை வரைந்தவர் முதலில் உயர்தர ரசனை மிக்கவராக இருந்திருக்கக்கூடும். தன்னுடைய மனக் கண்ணில் ஒட்டு மொத்த ஓவியத்தையும் பார்த்து ரசித்திருந்தால் மட்டுமே, இப்படிப்பட்ட அபாரமான ஓவியத்தை வரைந்திருக்க முடியும்.

மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கையில், ஜெர்மன் மடாலயத்தின் இடது புறத்திலிருந்து காற்று வீசியது. ‘இங்கே வா’ என யாரோ அழைத்தது போல இருந்தது. அந்த அழைப்பு யாரிடமிருந்து வந்தது என எனக்குத் தெரியும். மீண்டும் காற்று தொடர்ந்து வீசியது. இந்த முறை கொஞ்சம் பலமாக. அவள் என்னை மீண்டும் அழைத்தாள். மூச்சை ஆழமாக இழுத்துவிட்டு, அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மிக நிதானமாக நடந்து சென்றேன். இதயம் வேகமாகத் துடித்தது. மனம் சிந்தனையெல்லாம் குழந்தைபோல மாறியது. பல முறை இணையத்தில் பார்த்திருந்தாலும், அவளை முதன் முறையாக நேரில் பார்த்த அந்தத் தருணம் மிக முக்கியமானது. அவள் முன் யாரும் இருக்கக் கூடாது, எந்தச் சத்தமும் இருக்கக் கூடாது, அவள் முன் நான் மட்டும் நிற்க வேண்டும் என நினைத்துக் கொண்டே சற்றுமுன் பார்த்த புத்தப் பிக்குகள் போல நிதானமாக நடந்தேன்.



‘ஓம் தாரே துத்தாரே துரே சோஹா’ எனும் அவளின் மந்திரம் சிந்தனையில் ஒளித்தது. எனது நடையை இன்னும் நிதானமாக்கினேன்.


“உன்னுடைய ஒவ்வொரு அடியும் முக்கியமானது. ஏதேனும் பொருட்கள் விழுந்தாலும் கூட காலைப் பின்நோக்கி வைக்காதே. உன்னுடைய இலக்கு மலை; மடுவில்லை,” என கோவிந் எனும் பளுத்தூக்கி அன்னப்பூரனா மலையையேறும்போது சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அவளை நோக்கி நடக்கும் ஒவ்வொரு அடியும் முக்கியமானதுதான். நான் நினைத்தது போலவே, அவளின் ஓவியத்தருகே யாருமில்லை. அவளின் பாதத்தில் தொடங்கி முகம் வரை கண்களை அகலமாக விரித்துப் பார்த்தேன். அவளின் அழகை முழுமையாகப் பார்த்தவுடன் கண்கள் கலங்கின. மிக தத்ரூபமாக இருந்தாள்.


அவளின் பெயர் தாரா.


தாரா, புத்தரின் பெண் உருவம் எனக் கருதப்படுபவள். புத்தர் என்றால் ஞானம் பெற்றவர் என்று அர்த்தம். யாருக்கெல்லாம் ஞானம் கிடைக்கிறதோ அவர்கள் புத்தராகக் கருதப்படுவார்கள். சித்தார்த்த கெளதமர் மட்டும் புத்தர் அல்ல. அவரைத் தவிர நிறைய புத்தர்கள் பெளத்த மதத்தில் இருக்கின்றனர். அந்த வரிசையில் முதன்மையானவர், அவலோகிதேஸ்வரர். சீன மற்றும் திபெத்திய கலாச்சாரத்தில் அவலோகிதீஸ்வரர் குவான் யின் என அழைக்கப்படுகிறார்.




ஒருநாள் மக்கள் சம்சார பந்தத்தில் படும் துன்பத்தைப் பார்த்த அவலோகிதேஸ்வரர் மிக ஆழ்ந்த துக்கத்தில் அழத் தொடங்கினார். பல நாட்களாக அவர் அழுகை நிற்காமல் வடிந்து கொண்டே இருந்தது. அவரின் கண்ணீர் எல்லாம் ஒரு பகுதியில் சேர்ந்து நாளடைவில் ஒரு பெரிய ஏரியாக உருவெடுத்தது. சில நாட்களுக்குப் பிறகு, அந்த ஏரியில் தாமரை செடிகள் பூக்கத் தொடங்கியது. அங்கு 21 தாமரை மொட்டுகள் உருவாகி, மலரும் தருணம் வந்தது. ஒருநாள் சூரிய ஒளிப்பட்டு தாமரை மலர்கள் தன்னுடைய இதழ்களை விரிக்கையில் அதிலிருந்து தாரா பிறக்கிறாள். ஒவ்வொரு தாமரையிலும், ஒவ்வொரு தாரா. மொத்தம் 21 தாராக்கள் பிறந்தனர்.


அதில் முதலில் மலர்ந்து பிறந்தவள்தான் பச்சை தாரா. வெள்ளை, சிவப்பு, மஞ்சள், நீலம், கருநீலம், சந்தனம் எனப் பல வண்ணங்களில் மற்ற தாராக்கள் பிறந்தார்கள். அவலோகிதேஸ்வரர் தன்னுடைய கண்ணீரில் உருவானதால், அனைத்து தாராக்களும் பிறவியிலேயே கருணை மற்றும் இரக்க குணம் கொண்டவர்கள் என அறிகிறார். அவர்கள் அனைவரும் மிகவும் புனிதமானவர்கள் என மக்களுக்குத் அறிவிக்கிறார். அவலோகிதேஸ்வரர் அனைத்து தாராக்களையும் அரண்மனையில் இளவரசிகளாக வளர்க்கிறார். சிறுவயதிலிருந்தே அவலோகிதேஸ்வரர் தாராக்களுக்குக் குருக்குலம் போதனைகள், நடனம், இசை என அனைத்து போதனைகளும் அவர்களுக்கு உபதேசித்து வருகிறார்.



போதனைக்கு மீறிய ஞானமும் அறிவும் தாராக்களிடம் இருப்பதை அவலோகிதேஸ்வரர் அறிகிறார். தாராக்கள் போற்றப்படுவர்கள், வணங்கக் கூடியவர்கள், அவர்கள் போதனையைப் பின்பற்றும் படி அவலோகிதேஸ்வரர் மக்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். இதுவரை புத்தராக ஆண்கள்தான் இருந்து வருகின்றனர். பெண் புத்தர் இதுவரைக்கும் இல்லை. மக்கள் தாராக்களை மறுபிறவி எடுத்து ஆண் புத்தராக வந்து அருள் புரிய மிகத் தாழ்மையுடன் தாராவிடம் கோரிக்கைவிடுக்கின்றனர். பச்சை தாரா அதற்கு(அதனை) மறுக்கிறாள். தாரா தான் பெண் புத்தாவாகத்தான் இருந்து ஞான நிலையை அடைவேன் என மக்களுக்குக் கூறுகிறாள். “எனக்கு முன் நிறைய ஆண் புத்தாக்கள் உள்ளனர். நான் பெண் வடிவில் இருந்து பெளத்தத்தைப் பின்பற்றி ஞான நிலையை அடைவேன்,” என மக்களுக்குத் தெரிவித்து ஞான நிலையை அடைகிறாள் பச்சை தாரா. அவளைப் பின்பற்றி மற்ற நிற தாராக்களும் ஞான நிலையை அடைகிறார்கள்.


அவலோகிதேஸ்வரரிடம் ஆசிப் பெற்று, அவரின் உபதேசத்திற்கேற்ப தன்னுடைய கடமைகளைச் செய்வதாகக் கூறி 21 தாராக்களும் ஒவ்வொரு பொறுப்பை எடுத்துக் கொண்டு மக்களை ஞானநிலைக்கு அழைத்துச் செல்ல அருள் புரிய ஆரம்பிக்கிறார்கள். தாரா என்றால் நிரந்தரமான நட்சத்திரம் என்பதாகும். இருளில் இருக்கும் பக்தர்களுக்கு நிரந்தரமான ஒளி கொடுப்பவள். ஒரு நிரந்தரமான ஒளியின் உருவம் கொண்ட தாராவின் ஓவியத்திற்கு முன்புதான் நான் நின்றுக் கொண்டிருந்தேன்.

ஜெர்மன் மடாலயத்தில் 21 தாராக்களும் மிக நுட்பமாகத் தங்கா ஓவிய பாணியில் வரையப்பட்டிருந்தது. அனைத்துத் தாராக்களின் கண்களிலும் ஒளி பிரகாசித்தது. 21 தாராக்களில் முதன்மையானவள் பச்சை தாரா என்பதால், அவளே நடுப்பகுதியில் மற்ற தாராக்களை விட கொஞ்சம் பெரியதாக வீற்றிருந்தாள். அவளின் பச்சை நிறம் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்தது. சிறுவயதிலிருந்தே மலைப் பகுதியில், மலைத்தொடர்களில், மலைப்பாதையில், தேயிலைத் தோட்டத்தில், செடிகளில், புற்களில், திடலில் எனப் பலவிதமான பச்சை என்னை எப்பொழுதும் சூழ்ந்தே இருக்கும். ஆனால், தாராவின் பச்சை நிறத்தை இதுவரை நான் கண்டதில்லை. லும்பினியில் கூரை பிளந்து வெயில் அடித்தாலும், பல வருடங்களுக்கு முன்னால் வரைந்த மண்டலா மற்றும் தங்கா ஓவியத்தின் வண்ணங்கள் கொஞ்சம் கூட மங்கவேயில்லை. சொல்லப்போனால் அவை வெயிலில் மேலும் பிரகசித்தது(பிரகாசித்தது). ஒரு சிறிய குறைக்கூட தாரா ஓவியத்தில் இல்லை.


அவளை ஓர் ஓவியம் எனச் சொல்வதை, நான் மரியாதை குறைவாகவே எண்ணுகிறேன். அவளை நேரில் கண்டது போலதான் உணர்ந்தேன். அவ்வளவு நிஜத்தன்மை கொண்ட ஓவியம் அது. பச்சை தாராவைச் சுற்றி மீதம் 20 தாராக்கள் பல வண்ணங்களில் காட்சியளித்தாலும், என் எண்ணம் முழுக்க மையத்தில் அமர்ந்திருக்கும் பச்சை தாராவிடம் மட்டுமே இருந்தது. அவளின் கண்களில் உயிர் இருந்தது. அவள் மிகவும் மென்மையானவள், சாந்தமானவள், பெண்மை நிறைந்தவள் என அவளின் அங்கத்தின் வளைவுகளின் மூலம் உள்வாங்கிக்கொண்டேன். கம்போடியாவில் அப்சரா சிலைக்குப் பிறகு, தன்னுடைய அழகால் என்னை ஈர்த்தவள் இவள்தான். அவள் உடலைச் சுற்றியிருந்த சிவப்பு துணி, காற்றில் பறந்து வந்து அவள் மேனியைச் சூழ்ந்தது போல இருந்தது. அவள் அருள் புரியும் கைகளிலும் பாதக்கமலத்திலும் அவ்வளவு நளினம். நான் நடனம் ஆடும்போது, கைகளையும் கால்களையும் அவ்வாறு வைத்து ஆடியதுண்டு. அவள் உடலில் எவ்வளவு நளினம் இருந்திருந்தால் அவை அப்படிக் காட்சியளிக்கும் என நடனம் ஆடும்போது உணர்ந்திருக்கிறேன். இவளை வரைந்த ஓவியருக்கு அவள் கண்டிப்பாகக் காட்சியளித்திருப்பாள். இல்லையென்றால் இவ்வளவு தத்ரூபமாக வரைய முடியாது.


கண்ணீர் வடிய அவளை ரசித்துக் கொண்டிருந்தேன். அவள் என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தாள் என உணர முடிந்தது. கண்களை மூடி அவள் பிடித்திருந்த முத்திரை, திரிப்பங்கி, பாதத்தின் அமைப்பு எல்லாவற்றையும் செய்து அவளைப் போல நிற்கையில், அவள் பெளத்த கடவுள் மட்டுமல்ல, அவள் ஒரு சிறந்த நர்த்தகி என என்னால் உணர முடிந்தது. நான் அவள் போலவே நிற்பதை உடன் வந்திருந்த நண்பர்கள் பார்த்துவிடக்கூடாதென்று, இயல்பான நிலைக்கு வந்தேன். தாரா நான் விரும்பியது போலவே அவள் முன் நிற்க என்னை மட்டுமே நீண்ட நேரம் அனுமதித்திருந்தாள்.




நீண்ட நேரம் ஆகியும், ஜெர்மன் மடாலயத்தின் இடது புறத்துக்கு யாரும் வரவில்லை. உடன் வந்திருந்த நண்பர்கள் யாரும் என்னுடன் இல்லையென மிகத் தாமதமாகத்தான் உணர்ந்தேன். பக்கத்தில் இருந்த சுவரில் கைகளைப் பற்றி எட்டி பார்க்கையில் நவீன், வசந்தி, அரவின், சிவா என எல்லோரும் Spinning prayer wheel பிராத்தனைச் சக்கரத்தை வளம் வந்து கொண்டிருந்தனர். தூரத்திலிருந்து பார்க்கையில் அந்தச் சக்கரத்தின் சுழற்சி மிக அழகானதாக இருந்தது. மிகப் பெரிய பிராத்தனை சக்கரம் அது. அந்தச் சுழற்சி ஒரு அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வு ஒரு சக்தியாக மாறி அங்கு உள்ளவர்களுக்குப் பரவும். அவ்வளவு பெரிய பிராத்தனை சக்கரச் சுழற்சியை நான் அங்குதான் பார்த்தேன். திபெத்தியர்கள் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உதவுவதற்கும், அவர்களின் கர்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கும் பிரார்த்தனை சக்கரங்களைச் சுழற்றுகின்றனர். அவை தியானப் பயிற்சியின் ஒரு பகுதியாகும். சித்தார்த்த கெளதமரின் ஒரு முக்கியமான தியான போதனையின் கருவி இது.


மீண்டும் திரும்பி தாராவின் ஓவியத்தைப் பார்த்தேன். தாரா ஏன் இவ்வளவு அழகானவளாக இருக்கிறாள் எனும் கேள்விக்கான பதிலைத் தேடிக் கொண்டிருந்தேன். அவளின் கண்களா? ஆமாம், அவளின் கண்கள். தாராவின் கண்கள் தியான நிலையில் இருந்தது. அவள் கண்கள் கீழ்நோக்கி இருக்கும். போதிசத்துவம் தன்மை கொண்டவர்களின் கண்கள் அப்படிதான் காட்சியளிக்கும். தாரா ஒரு போதிசத்துவர். பெண் புத்தர் வடிவில் இனி மக்களை ஞானநிலைக்குக் கூட்டிச் செல்வேன் என அவலோகிதேஸ்வரரிடம் தாரா சத்தியம் செய்து போதிசதத்துவராக உருவெடுத்தாள். போதிசத்துவர்களின் முதன்மையான கடமை மக்களுக்கு உபதேசம் செய்து பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் இருக்கும் சம்சார பந்தத்திலிருந்து ஞான நிலைக்கு அழைத்துச் செல்வது. அதன்பிறகுதான் அவர்கள் ஞான நிலைக்குச் செல்வார்கள். அதுவரை மக்களைப் பாதுகாக்கும் பணியில் இருப்பார்கள். போதிசத்துவ நிலையை அடைந்தவர்கள் எப்பொழுதும் தியான நிலையில்தான் இருப்பார்கள். அவர்களின் கண்கள் கீழ்நோக்கிதான் இருக்கும். தாரா ஒரு முழுமையான போதிசத்துவர். 21 தாராக்களின் கண்களும் கீழ்நோக்கி தியான நிலையில்தான் இருந்தது. கருணை நிறைந்தவளின் கண்கள் அது.


சட்டென்று ஒரு நீல நிறம் கவனத்தை ஈர்த்தது. அது நீலத் தாமரை. பச்சை தாரா இடது கரத்தில் நீல நிறத் தாமரை ஒன்றை அதன் தண்டுடன் பிடித்திருந்தாள். நீல நிறம் தாமரைப்பூ வகைகளில் அரிது. அரிதான ஒன்றை அவள் கரத்தில் வைத்திருந்தாள். மேலோட்டமாக மற்ற தாராக்களைப் பார்வையிட்டேன். எல்லா தாராக்களின் கரத்திலும் தாமரை இல்லை. ஒரு சில தாராக்களின் கைகளில் மட்டும் பார்க்க முடிந்தது. ஆனால், எல்லாமும் நீல நிறத் தாமரையாக மட்டும்தான் இருந்தது.



எனக்கு மண்டலா ஓவியத்தை அறிமுகம் செய்து வைத்த புகழ் மாமா நீலத் தாமரையைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். மண்டலா மற்றும் தங்கா ஓவியத்தில் தாமரை மிக முக்கியமான அங்கம். அதுவும் நீலத் தாமரையை அதிகம் பயன்படுத்துவார்கள். நீலம் மூன்று முதன்மையான வண்ணங்களில் ஒன்று. வேறு வண்ணக் கலவையும் இன்றி பிரகாசிப்பவை. ஆனால், தாராவின் கரத்தில் இருந்த நீலம் முற்றிலும் வேறுப்பட்டது. மிக அரிதான நீல வண்ணம் அது. அந்த நீலம் எனக்கு மானஸ்வரோவரை நினைவுப்படுத்தியது.

மானஸ்வரோவர் என்பது ஓரு புனிதமான ஏரியின் பெயர். அது கைலாய மலைக்கருகில் உள்ளது. ஆசியா நாடுகளின் முதன்மையான நான்கு நதிகளுக்கு அருகில் அமைந்திருக்கும் ஓர் அழகான ஏரி அது. கைலாய மலையை ஏறுபவர்கள், மானஸ்வரோவர் ஏரியைக் கடந்துதான் செல்ல வேண்டும். அதிகாலை வேலையில்(வேளையில்) மானஸ்வரோவரில் நீராடி, பயணிகள் கைலாய பயணத்தைத் தொடங்குவது ஒரு ஐதிகமாக வைத்துள்ளார்கள். அதிகாலை வேளையில் பிரம்ம முகூர்தம் சமயத்தில் மானஸ்வரோவரின் அழகைப் பற்றி புகழ் மாமா பேசாத நாளில்லை. பிரம்ம முகூர்த வேளையின் போது, மானஸ்வரோவர் முழுதும் நீலமாக மாறுமாம். அப்பொழுது ஏதோ ஓர் ஒளி வானத்திலிருந்து மானஸ்வரோவர் ஏரிக்குள் விழுமாம். வானத்திலிருந்து தேவர்கள், சிவம் குடியிருக்கும் கைலாய மலைக்கருகில் வந்து நீராடி செல்வார்கள் என ஒரு நம்பிக்கை உண்டு. அப்படி நீராடிச் செல்லும் போது அந்த இடமே நீல நிறமாக மாறியிருக்குமாம். இதுவரை எந்தத் தொழில்நுட்ப காமிராக்களாலும் மானஸ்வரோவவின் நிஜக் கலரை புகைப்படம் பிடித்ததில்லை எனப் புகழ் மாமா பலமுறை கூறியிருக்கிறார்.


நான் இணையத்திலும் இந்தத் தகவலைப் படித்ததுண்டு. இதை தவிர மானஸ்வரோவரில் இன்னொரு அதிசயமும் உண்டு. மானஸ்வரோவர் ஏரியில் மட்டும் நீல தாமரை பூக்குமாம். சூரிய ஒளிப் பட்டு மலரும் தாமரை இல்லை அது. நிலா ஒளிப்பட்டு மலரும் நீலத் தாமரை. இரவில் மட்டும் மலரும் தாமரை அது. மானஸ்வரோவரில் மட்டும் இந்த அதிசயம் நடக்கும் எனப் புகழ் மாமா கூறியது ஞாபகத்திற்கு வந்தது. இதுவரை பார்த்திராத நீல நிறத்தைப் பார்த்ததும், சிந்தனை மானஸ்வரோவருக்கும் சென்றது.



பெளத்த மதத்தில் தாமரைக்கு நிறைய பங்கு உண்டு. புத்தரின் அன்னை மாயா தேவி, தன்னுடைய சீமந்தத்திற்காக அவர் அன்னை இல்லத்திற்குச் செல்லும் வழியில் ஒரு பூங்காவைப் பார்த்து அதில் உலாவ வருகிறார். அவ்வேளையில் அவருக்குப் பிரசவ வலி வந்து புத்தர் பிறக்கையில், அவரை முதன் முதலில் ஏந்தியது தாமரை மலர்தான். அதனால்தான், இன்றுவரை புத்தரின் பிறந்தநாள் தாமரை திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பெளத்த மதத்தில் தாமரை சரணடைவதனின் சின்னமாகவும் உடல், பேச்சு மற்றும் மனத்தின் தூய்மையைக் குறிக்கிறது. தாராவின் கரத்தில் அவ்வளவு சிறப்பு வாய்ந்த நீலத் தாமரையைப் பார்த்ததும் அவள் மேலும் அழகானவளாகப் பிரதிபலித்தாள்.


தாராவைப் பார்க்க பார்க்க திகட்டவே இல்லை. அவள் நடனமாடினால் எப்படியிருக்கும் என நினைக்கையில் முன்னால் வாழும் கடவுளான, சனிரா அனுப்பியிருந்த ஷார்யா நித்திய நடனம் ஞாபகத்திற்கு வந்தது. ஷார்யா நித்திய நடனம் தாராவை மையப்படுத்தி ஆடும் நாட்டியமாகும். தாரா தன்னுடைய உபதேசத்தை ஆடல் பாடலின் மூலம் பக்தர்களுக்கு அருளினாள்.



பெளத்துவ மதத்தில் முதன்மையான மூன்று பிரிவுகள் உள்ளன. அவை மகாயானம், தேரவாதம் மற்றும் வஜ்ரயானம் (Mahayana, Theravada, and Vajrayana) ஆகும். வஜ்ரயானத்தில் நெறிமுறைகள், ஒழுக்கம், இரக்கம் மற்றும் தியானம் போன்றவற்றைப் பயிற்சி செய்வதற்குப் பதிலாக, ஒருவர் வாழ்நாளில் ஞானம் அடைவதற்கு நடனம், இசை, உடல் பயிற்சிகள் (யோகா) போன்றவை மூலமும் ஞானம் பெரும் இன்னொரு முறையாகும். இந்த முறைப்படிதான் தாரா பக்கதர்களுக்கு உபதேசித்தாள். இந்த முறை மிகக் குறுகிய காலத்திலேயே ஞானம் பெரும் ஒரு வகையாகும். இந்த முறை பெளத்த மதத்தில் அதிகமாகப் போதிச்சத்துவர்கள்தான் பின்பற்றினர். அவலோகிதேஸ்வரர் போதிச்சத்துவர்களில் முதன்மையானவராக இருக்கையில், அவர்தான் இந்த நடனத்தையும் உருவாக்கியிருந்தார். தாராவுக்கு அவலோகிதேஸ்வரர் முதன் முறையாக இந்த நடனத்தைக் கற்றுக் கொடுத்தார். தாரா தன்னுடைய உபதேசத்தை ஷர்யா நிர்த்யா நடனத்தின் மூலம்தான் பக்கதர்களுக்கு அருளினார். ஷார்யா நித்திய நடனத்தின் போது தாரா ஒரு நர்த்தகியின் உடலில் இறங்கி ஆடுவதாகவும், அவள் அந்த நடனத்தின் மூலம் அருள் தருகிறாள் எனவும் பௌத்த மதத்தில் நம்பிக்கை உண்டு. ஷார்யா நித்திய நடனத்தை ஆடுவதற்கு முன், சில சடங்குகளைப் பின்பற்ற வேண்டும். அவற்றின் முதன்மையானது மண்டலா வரைவது.


ஒரு நர்த்தகி மண்டலாவை வரைகையில் அவளின் சிந்தனை ஒருநிலைப்படுகிறது. மண்டலாவின் மையத்தில் தாமரை வரையும்போது அவள் ஞானம் பெற்று, தாராவை நோக்கி தியானத்தைத் தொடங்குகிறார்கள். தியானத்தின்போது, தாரா நர்த்தகியின் உடலுக்குள் இறங்கிவிடுவாள் என ஒரு நம்பிக்கை உண்டு. அதன் பிறகு ஒரு நர்த்தகி, தாராவாக ஷார்யா நிர்த்திய நடனத்தை ஆடத் தொடங்குவாள் எனச் சனிரா தன் அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டது ஞாபகத்திற்கு வந்தது. தன் உடலுக்குள் இறங்கும் தாராவின் வருகையைத் தியானத்தின்போது உணர முடியும் எனச் சனிரா கூறியது மிக வியப்பாக இருந்தது. கொஞ்சம் பொறாமையும் வந்தது.



நானும் தாராவை என் உடலுக்குள் உணர்ந்து, அதன்பின் நடனம் ஆட மனம் ஏங்கியது. அப்படி ஒரு தெய்வ சக்தியை உணர்ந்து ஆடும் நடனம் தெய்வீகமானதாக இருக்கும் என நான் நன்கு அறிவேன். ஷர்யா நிர்த்யா நடனத்திற்கும் பரதநாட்டியத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. பரதநாட்டியத்தில் பயன்படுத்தப்படும் அதே கை முத்திரைகளைக் கொண்டுதான் ஷர்யா நிர்த்யாவையும் நடனமாடுகிறார்கள். பரதநாட்டியம் போலவே ஷர்யா நிர்த்யா நடனத்தைக் கோயில்களில் கடவுளைப் போற்றியும் கடவுளாகவும் மாறி ஆடும் நாட்டியமாகும். ஷர்யா நிர்த்யாவின் ஆபரணங்களும் ஏறக்குறைய பரதநாட்டியம் போலதான் இருந்தது. எல்லாவற்றைக்கும் மேலாக ஷர்யா நிர்த்யா நடனத்தில் திரிபங்கியின் பயன்பாடு அதிகம்.





திரிபங்கி என்பது பரதநாட்டியம் மற்றும் ஒடிசி போன்ற இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் பயன்படுத்தப்படும் நிற்கும் உடல் நிலை. முழங்கால்கள் ஒரு திசையிலும், இடுப்பில் மற்றொரு திசையிலும், தோள்களும் கழுத்தும் மற்றொரு திசையிலும் வளைந்திருக்கும். இவ்வாறு நிற்கும் நிலை இந்திய கலையில் மிகப் பழமையானது. மேலும் இந்திய சிற்பம் மற்றும் ஓவியத்தில் அந்த நிலையை அதிகமாகக் காணலாம். பெரும்பாலான இந்திய கடவுள்கள் திரிபங்கியில் தான் காட்சியளிப்பர். கோயில்களில் சிற்பங்களும் ஓவியங்களும் இதனைப் பிரதிபலிக்கும். கிருஷ்ணன், அர்த்தநாரீசுவரர், திரிபுரசுந்தரி, பூதேஸ்வர யக்ஷிகள், அப்சரா, தூர்கை எனத் திரிபங்கியில் நிற்கும் தெய்வங்களை அடுங்கிக்(அடுக்கிக்) கொண்டே போகலாம். திரிபங்கியில் நிற்கும் தெய்வங்கள் பார்ப்பதற்கு மிக அழகானவராகவும் பிறரின் கவனத்தை ஈர்ப்பவர்களாவும் வசிகரமானவராகவும் இருப்பார்கள். ஆனால், திரிபங்கியின் முதன்மையான பொருள், நடனத்தின் பிரதிபலிப்பு. அந்தத் தெய்வம் நடன ஆடுபவள் எனப் பொருள் படும். ஆனால் பெளத்த மத்ததில் இந்த நிலையைக் காண ஆச்சிரியமாக இருந்தது. திரிபங்கி வளைவினில்தான் தாரா தாமரையின் மீது அமர்ந்திருப்பாள். தாரா பரதநாட்டிய பாணியில் ஆடினால், எப்படியிருக்கும் என மனவோட்டத்தில் ஆடிப் பார்த்தேன். அதற்கு தாராவின் அருள் வேண்டும்.




ஜெர்மன் மடாலயத்திற்குப் பிறகு நான் சென்ற அனைத்து மடாலயத்திலும் என் கண்ணில் தாரா மட்டும் தென்பட்டாள். முக்கியமாக நேபாள் மடாலயத்தில், நேவார் கலாச்சாரத்தை மையப்படுத்தி கட்டிய மடாலயம் மிக அற்புதமாக இருந்தது. உள்ளே சென்றதும், எனக்கு நடனம் ஆடத் தோன்றியது. அப்படித் தோன்றினால், அங்கு நேர்மறை அதிர்வு அதிகம் இருக்கின்றது என அர்த்தம். அந்த நேர்மறை அதிர்வு ஒரு பிரம்மாண்டமான தங்க நிறத் தாராவிடமிருந்துதான் வந்தது. இம்முறை ஓவியம் அல்ல. மிகப் பெரிய சிலை வடிவம். அவள் தக தகவென மின்னினாள். தங்க தாரா பக்தர்களின் வாழ்க்கையில் ஒளியாகத் திகழ்வபவள். தங்க தாரா ஒரு குவளை போல் பாத்திரத்தைக் கையில் வைத்திருந்தாள். பக்தர்களின் உயிர் ஆற்றல், சக்தி, உடமைகள் மற்றும் ஆன்மீகத்தை அதிகரிக்கும் சக்தி கொண்டுள்ளது அந்தப் பாத்திரம். அவளின் ஒளி நேபாள் மாடலயம் முழுக்கப் பரவியிருந்தது. நேபாள் மாடலயத்தில் எல்லா தூண்களிலும் தாராவின் சிலைகள் தான்.



தக தகவென எரியும் நெருப்பு வெறும் அனலை மட்டும் கொடுக்காது. அது மிகப் பிரகாசமான ஒளியையும் சேர்த்துக் கொடுக்கும். தாராவிடம் இவை இரண்டையும் உணர்ந்தேன். எரியும் நெருப்புக்குப் பக்கத்தில் நின்றால் உடல் முழுக்க அதன் அனல் பரவும். அதன் ஒளி நம் முகத்தில் பிரதிபலிக்கும். தங்க தாராவின் சிலைக்குப் பக்கத்தில் நின்றபோது அப்படிதான் இருந்தது. என் முகத்தில் அவள் பிரதிபலித்தாள்.



‘உன்னைப் போல நானும், பிறரின் நன்மைக்காக வாழ முயற்சிக்கிறேன்’ எனச் சொல்லி அவளிடமிருந்து விடைப்பெற்றேன். அவள் என்னைப் பார்த்து ஒரு சிறிய புன்னகையிட்டாள்.


-------------------------------------------------------------------------------

இதழ் 144 - நவம்பர் 2023 | பச்சை நாயகி | வல்லினம் இணைய இதழ்

English Version of Tara


No comments:

Post a Comment