இமயமலைத் தொடரில் பத்தாவது உயர்ந்த சிகரமான அன்னப்பூர்ணாவை நோக்கி ஏறும் நடை பயணம் அன்று காலையிலேயே தொடங்கியது. நேபாளின் தலைநகரமான காத்மாண்டு நகர நெரிசலிலிருந்து எங்களின் பேருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு மலை பகுதிக்குள் நுழைய ஆரம்பித்தது. போதுவாக மலை பாதையில் பயணிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. வாந்தி, தலைச்சுற்றல், பசியின்மை போன்ற பல உபாதைகள் உடலில் ஏற்படும். ஆனால் எனக்கு மலை பயணம் என்பது ஆத்மாவை மீட்டெடுக்கும் தியானம் போன்றது. சிறுவயதிலிருந்தே மலைகளின் நிழலில் வாழ்ந்து, மலைகாற்றை சுவாசித்து, மலையின் சிகரங்களைப் பார்த்து வளர்ந்த மலைவாசி என்பதால், மலையின் பிரமாண்டத்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும்.
சுமார் ஏழு மணி நேர பேருந்து பயணத்திற்குப் பிறகு நடை பயணம் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டது. பேருந்தில் என்னுடன் பயணித்த சகப் பயணிகளின் ஆரவாரம் கூடிக்கொண்டே இருப்பதைக் காண முடிந்தது. மலைகளின் நேர்மறை அதிர்வுகள் கொடுத்த தாக்கங்கள் அவை. இமயமலை, அதை சூழ்ந்திருக்கும் பனிக்கட்டிகள், மலையில் பொங்கும் பிரமாண்ட அருவிகள் எனப் பலவற்றையும் வாழ்நாளில் முதன் முறையாகப் பார்க்க போகிறேன் எனும் எண்ணம் நீர் ஊற்று போல சிந்தனையில் ஊடுருவிக் கொண்டே இருந்தது.
எங்கள் மலைப் பயணத்தை மேலும் உற்சாகமூட்டும் விதத்தில், பேருந்து ஓட்டுனர் நேபாள் நாட்டின் பிரபலமான சில நாட்டுப்புறப் பாடல்களை ஒலிபரப்பினார். நாட்டுப்புறப் பாடல்கள் உணர்வுபூர்வமானவை. அவை பெரும்பாலும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை பற்றிய கதைகளைக் கூறுபவை. அவற்றைக் கேட்பது பாரம்பரியத்துடனான தொடர்பை உணர வைக்கும். பழக்கமானவர்களுடன் நிகழும் தழுவலைப் போல், கலாச்சாரப் பின்னணியில் இருந்து எழும் இசையின் ஓசை நம்மை மிக விரையில் தழுவிக் கொள்ளும். பேருந்தில் ஒலித்த அனைத்துப் பாடல்களும் என்னைக் கொஞ்சம் அதிகமாகவே தழுவிக் கொண்டது. குறிப்பாக ‘பாசா பாசா பியாரி’ எனும் பாடல்.
அந்தப் பாடல் பேருந்தில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. எல்லோரும் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்ய ஆரம்பித்திருந்தனர். அதுவரை இமயமலையின் நீரில் சுத்திகரிக்கப்பட்ட ரம் வகையான குக்கிரியைக் கண்டு பரவசமான பயண நண்பர்கள், இந்தப் பாடல் ஒலியேறிய பிறகு இசையில் முழ்கி மெய் மறந்து கேட்பதைப் பார்த்தேன். அதே பாடலையே தொடந்து கேட்கவும் விரும்பினர். எனவே அப்பாடல் பேருந்தில் மீண்டும் மீண்டும் ஒலியேறிக் கொண்டே இருந்தது. ரம் கொடுக்கும் போதையை விட, இசையின் போதை அதிகம் எனப் பயண நண்பர்கள் உணர்ந்திருக்கக் கூடும்.
‘பாசா பாசா பியாரி’ ஓர் உயிர்ரோட்ட மிக்க பாடல். இந்தப் பாடலின் இசை மிக எளிய முறையில் இருந்தது. தீபெத்திய இசையின் சாயலும் தென்பட்டது. இசையின் நுணுக்கங்களை அறியாதவர்களையும் இப்பாடல் சென்றடையும். ஒரு பாடலின் தாக்கம் உடம்பில் சில அசைவுகளைக் கொண்டு வரும். தலையை அசைக்க வைக்கும். கைகளைத் தட்ட வைக்கும். தொடையில் தாளம் போட வைக்கும். எல்லாவற்றையும் மீறி நம்முடைய உணர்வலைகளை மிக எளிதில் மாற்றிவிடும். ‘பாசா பாசா பியாரி’ இவை எல்லாவற்றையும் செய்தது. மலை பயணத்தின்போது உடலில் ஏற்படும் உபாதைகள் எதுவும் ஏற்படாமல், அவையனைத்தையும் தடுக்கும் மருந்தாக மாறியது. இசைக்கு அவ்வளவு சக்தி உள்ளது.
பொதுவாக நான் ஒரு பாடலில் வரும் வரிகளைவிட இசையின் நுட்பங்களைக் கேட்பவள். ஆனால், இந்தப் பாடல் நேபாள் மொழியில் அமைந்திருந்தாலும் அதன் வரிகள் என் கவனத்தை ஈர்த்தது. வரிகள் எனச் சொல்வதைவிட, ஒரே மாதிரியான ஓசைகள் மீண்டும் மீண்டும் ஒலியேறுவதை உணர்ந்தேன்.
மலை பயணத்தின்போது, எங்கள் பைகளைச் சுமந்துச் செல்ல, சில பளுதூக்கிகள் எங்களுடன் பேருந்தில் இணைந்திருந்தனர். உடனே, அவர்கள் பக்கம் திரும்பி, “இந்தப் பாடலில் ஒரு சொல் மீண்டும் மீண்டும் வருகிறது தானே?” என அவர்களிடன் உறுதிப்படுத்தக் கேட்டேன்.
“யெஸ் மேம், நீங்கள் எண்ணுவது சரிதான். இந்தப் பாடலில் ஒரே மாதிரியான சொற்கள் மீண்டும் மீண்டும் ஒலிப்பதனால், உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது. இந்தப் பாடல் தோஹோரி (Dohori) எனும் நேபாளி நாட்டுப்புற பாடல் வகையைச் சேர்ந்தது. தோஹோரி என்ற சொல், ‘முன்னும் பின்னுமாக’ என்று பொருள்படும். போட்டியிடும் பாடகர்களுக்கு இடையிலான பாடல் வரிகள் பரிமாற்றத்தைக் குறிக்கிறது. பொதுவாக தோஹோரி இரண்டு அணிகளால் பாடப்படுகிறது. ஆண்கள் ஒரு குழுவிலும் பெண்கள் மற்றொரு குழுவிலும் எதிரெதிர் பக்கங்களில் அமர்ந்து பாடுவார்கள். பார்ப்பதற்கு மிகச் சுவாரசியமாக இருக்கும். தோஹோரியைத் திருமண விழாக்களில் பாடுவது மிகப் பிரபலம்,” என எங்களுடன் பேருந்தில் வந்த பளுதூக்கி சொன்னார்.
“ஓ, அந்தாக்ஷரி போலவா?” என அவரிடம் கேட்டபோது, அவர் கண்கள் எதையோ தேடியது. நான் சொன்ன வார்த்தைக்கான அர்த்தத்தைத் தேடுகிறார் எனத் தாமதமாகத்தான் புரிந்தது.
மறுபடியும் அதே பாடல் ஒலித்தது. இசை நமது சிந்தனை ஆற்றலைப் பெருக்கச் செய்யும், கூடவே சிந்தனையில் ஒளிந்திருக்கும் சில நினைவுகளை மீட்டெடுக்கும். இந்தப் பாடல் நான் சிறுவயதிலிருந்து கல்லூரி வரை விளையாடிய அனைத்து அந்தாக்ஷரி விளையாட்டு நிகழ்வுகளையும் மீட்டெடுத்தது. முக்கியமாக சங்கீத வகுப்பின் நினைவுகளுடன் மலை பயணத்தை ரசித்துக் கொண்டு பேருந்தில் பயணித்தேன்.
மலை ஏறும் நடை பயணம் சோம்ராங் எனும் நூறு ஆண்டுகளுக்கும் மேலான ஒரு கிராமத்தில் ஆரம்பித்தது. நேபாளத்தின் முதல் மலையேறும் பாதைகள் இந்தக் கிராமத்தில் இருந்துதான் தொடங்கியது என நேபாளின் வரலாற்றில் உள்ளது. 278 மீட்டர் நீளம் கொண்ட ஒரு தொங்கு பாலம் சோம்ராங் கிராமத்தின் சிறப்பு. அந்தத் தொங்கு பாலம் மலை பகுதிக்குள் நுழைந்து செல்ல ஒரு தொப்புள்கொடியாக இருக்கிறது. தொங்கும் பாலத்தைக் கண்டவுடன் நண்பர்கள் அனைவரும் உற்சாகமாடைந்தனர்.
இனி ஆறு நாட்களுக்கு அனைவரும் நடராஜா தான் என நினைத்துக் கொண்டு தொங்கும் பாலத்தில் நடக்க ஆரம்பித்தேன். இமய மலை நீர் ஊற்றின் சத்தம், இதமான மலைக்காற்று, தொங்கும் பாலத்தின் அசைவு என இவையனைத்தையும் ரசித்து கொண்டிருக்கையில் மீண்டும் ‘பாசா பாசா பியாரி’ பாடல் சிந்தனையில் ஒலித்தது.
இம்முறை எந்தத் தொழில்நுட்ப வசதியும் இல்லாமல் வானொலியில் கேட்பது போலவே மிகத் தெளிவாகச் சிந்தனையில் அப்பாடல் ஒலியேறியது. எனக்கு இது பல முறை நடந்திருக்கிறது. சில பாடல்கள் இரவில் தூங்கவிடாமலும் செய்திருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் அறிமுகமான, மீண்டும் மீண்டும் கேட்டப் பாடல்கள். முதன் முறையாக அந்நிய மொழிப் பாடல் சிந்தனையில் ஒலிப்பதைக் கேட்க மிக வியப்பாக இருந்தது. இதுபோன்று ஏதேனும் பாடல் அல்லது ராகம் சிந்தனையில் ஒலிக்கும் போதெல்லாம், எனக்குத் தனிமை தேவைப்படும். ஒரு பாடல் அல்லது ஓர் இசையின் ராகம் நம் உணர்வுடன் வலுவான தொடர்புக் கொண்டிருந்தால் மட்டுமே இப்படி நிகழும் எனச் சங்கீத ஆசிரியர் சொல்லியிருக்கிறார். எனது நடையைக் கொஞ்சம் மெதுவாக்கி கொஞ்சம் நேரம் தனிமையில் நடந்தேன். இமய மலையின் ஊற்று நீரின் ஓசை, சந்தம் போல எனது இசையாற்றலை மேலும் வலுவாக்கியது. மிகச் சில வினாடியிலேயே என்னால் அந்தப் பாடலின் உச்சத்தை உணர முடிந்தது.
தொங்கு பாலத்தைத் தாண்டியதும், அடுத்தக் கிராமத்துக்குச் செல்ல சுமார் 2000 படிகளையாவது ஏறியிருப்போம். களைப்பாற ஒரு டீ ஹவுஸில் அமர்ந்தபோது, ‘பாசா பாசா பியாரி’ பாடலை மீண்டும் கேட்க ஆவலாக இருந்தது. எங்களுடன் வந்த பளுதூக்கிகளிடம் இப்பாடலை யூடியூப்பில் காட்டும் படி சொல்லியபோது, உடனடியாகத் தேடி எடுத்து ஒலிக்க விட்டனர். மலை நேசத்தில் அந்தப் பாடல் உள்ளத்தை ஏதோ செய்தது.
‘பாசா பாசா பியாரி’ இந்திய பாரம்பரிய இசை விளையாட்டான அந்தாக்ஷரி போல, ஒரு சொல்லில் முடிந்து, அதே சொல்லில் ஆரம்பிக்கிறது. ஆதிகாலத்தில் ரிஷிகள் கடவுளை நோக்கி பாராயணம் செய்ய இது போன்ற உத்திகளைப் பயன்படுத்தினார்கள். அந்த வரிசையில் அபிராமி பட்டரும் ஒருவர். அபிராமி பட்டர் மிகப் பிரபலமான அபிராமி அந்தாதி தொகுப்புகளை இந்த உத்தியில்தான் எழுதியிருக்கிறார். அந்தாக்ஷரி எனும் இசை விளையாட்டுப் போல, அமிராமி பட்டர் பாடலின் முடிவு அடுத்த பாடலுக்குத் துவக்கமாக அமையும் இலக்கண முறையான அந்தாதியில் சுமார் 100 பாடல்கள் எழுதியுள்ளார்.
நாட்டிய சாஸ்திரப்படி பஞ்ச பூதங்களுக்கு வணக்கத்தைச் சொல்லிய பிறகு, முழு மண்டியில் உட்கார்ந்து, அபிராமி அந்தாதியின் 69-ஆவது பாடலைப் பாடுவது எங்கள் நாட்டிய வகுப்பின் வழக்கம்.
எனும் கடைசி வரியைக் கூறும் போதெல்லாம் கண்களைத் திறந்து, மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மாளின் கடைக்கண்களை உற்றுப் பார்த்தப் பிறகுதான் நடனம் ஆட தொடங்குவோம். ஒரு குழந்தை ஏதேனும் ஒன்றை மன்றாடி வேண்டிக் கேட்கும்போது, தாயின் கண்கள் கனிந்திருப்பது போல், அபிராமியின் கண்கள் கனிந்திருப்பதைப் பல முறை உணர்ந்திருக்கிறேன். ‘பாசா பாசா பியாரி’ பாடல், அபிராமி அந்தாதியை நினைவுப்படுத்தியது.
“அதோ, அங்கு தெரியுதுல ஒரு டீ ஹவுஸ்… அங்கதான் இன்னைக்கு தங்க போறோம்” என மலையின் உச்சியில் இருந்த ஒரு வீட்டைக் காட்டினார் சுரேஷ். “இந்த குட்டி மலையை ஏறி இறங்கினால் அங்கு போயிடலாம்,” எனக் கால்வாயைக் கடப்பது போல மிக எளிதாகச் சொன்னார். அவர் காட்டிய உச்சியை அடைய சுமார் மூன்று மணி நேரமாவது ஆகும். எனக்கு அவர் கூறியதுமே மூச்சு வாங்கத் தொடங்கியது. சகப் பயணிகளுடன் பேசிக் கொண்டே மெல்ல மெல்ல மலையைத் தொடர்ந்து ஏறிச் சென்றேன். நிறைய பாறைகளைக் கடந்து செல்லும் நிலை வந்தது. உடலின் ஆற்றலைவிட மனதின் ஆற்றலைச் சோதித்தது அந்தப் பாறைகள். அன்றையப் பயணம் எப்போது முடியும் எனும் எண்ணம் ஏற்படத் தொடங்கியது.
பாறைகள் குவிந்திருந்த அவ்விடத்தில் ஓய்வெடுத்தபோது அப்படியே கொஞ்ச நேரம் களைப்பில் ஒரு பாறையின் மீது சாய்ந்து கொண்டேன். இசை என்பது நதியைப் போன்றது. அது நினைவில் ஓடும்போது நதிபோலவே பலவற்றையும் தன்னுடன் சேர்த்து அழைத்து வருகிறது. இம்முறை ‘பாசா பாசா பியாரி’ 90களில் வந்த ‘குணா’ திரைப்படத்தை நினைவுப்படுத்தியது. குணா திரைப்படம் முழுக்க முழுக்க அந்தாதியை மையமாக வைத்து இயக்கப்பட்ட ஒரு படம் எனப் பிரபல கர்நாடக இசைக் கலைஞரான சீக்கில் குருசரன் தன்னுடைய யூடியூப் சன்னலில் கூறியிருக்கிறார். அதை உள்வாங்கிக்கொண்டு பார்க்கும் போது, குணா படத்தின் பல உள்மடிப்புகளை மிக ஆளமாக அறிந்துகொள்ள முடியும்.
‘குணா’ திரைப்படம் ஒரு மனநலம் குன்றிய ஒரு தனிமனிதன், ஒரு தேவதையை மணக்கப் போவதாக நம்புகிறான். அவரைச் சில குண்டர்கள் கடத்திச் சென்று ஒரு கோவிலில் கொள்ளையடிக்கச் சொல்கிறார்கள். அங்கு அவர் தனது தேவதை என்று நினைக்கும் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து அவளைக் கடத்துகிறார் என இந்தத் திரைப்படத்தை மிக எளிதாக கடந்துவிட முடியாது. அபிராமி பட்டரின் நவீன புனைவுதான் ‘குணா’ திரைப்படம் என அதனைப் பார்த்தால் சில புதியக் காட்சிகள் புலப்படும்.
அபிராமி பட்டர் என அழைக்கப்படும் சுப்பிரமண்ய ஐயர் கோயிலுக்கு வரும் அனைத்து பெண்களையும் அபிராம வல்லியாக எண்ணி வணங்கி தன்னுடைய தீராத பக்தியை வெளிப்படுத்துவது போல ‘குணா’ படத்திலும் கமல் பார்க்கும் பெண்கள் அனைவரையும் அபிராமியாகவே எண்ணுவார்.
‘குணா’ திரைப்படத்தின் முதல் மற்றும் கடைசி காட்சி அந்தாதியை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும். படம், ஒளி வீசும் ஒரு பெளர்ணமி நிலாவைக் கொண்டுதான் ஆரம்பமாகும். அபிராமி பட்டரை சரபோஜ் மன்னரிமிருந்து காப்பாற்ற அபிராம வல்லி அவளுடைய கம்மலைக் கழற்றி வானத்தை நோக்கி வீசியதும், இருண்ட வானில் பெளர்ணமி நிலா போல கம்மல் ஜொலிக்கும். அந்த நிகழ்வை நினைவுக்கூறும் வகையில் ‘குணா’ படத்தின் முதல் காட்சி அமைந்திருக்கும். அதே முழு நிலா ஒளியுடன்தான் படம் நிறைவடையும்.
படத்தின் தொடக்கத்திலேயே கமல் நடராஜர் போல நடன கோலத்தில் நிற்பார். படத்தின் கடைசி பகுதியிலும் அதே நடராஜர் பாணியில் இறந்து போன தன்னுடைய காதலியான அபிராமியைத் தூக்கிக் கொண்டு நிற்பார். இதனைத் தவிர்த்து, ஒரு மணப்பெண்ணை அபிராமியாக எண்ணி ‘புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்’ எனும் பாடலைப் பாடுவார் கமல். பட இறுதியில் தன்னுடைய காதலியான அபிராமி இறந்த பிறகு மீண்டும் அதே பாடலைப் பாடுவார்.
கடத்திச் சென்ற அபிராமியைத் திருமணம் செய்துகொள்ள பெளர்ணமிக்குக் காத்திருப்பார். மனம் நிறைந்த நாள்தான் பெளர்ணமி. இன்றைக்குதான் பெளர்ணமி எனச் சொல்வாள் கதாநாயகி. அபிராமி சொன்னால் பெளர்ணமிதான் எனக் குணா ஒப்புக்கொள்வார். இந்தக் காட்சி அம்மாவாசையைப் பெளர்ணமியாக்கிய அபிராம வல்லியின் ஆற்றலைப் பிரிதிபலிப்பவை.
இவையெல்லாம் ‘குணா’ பாடத்தின் காட்சிகளில் அமைந்திருந்த அபிராமி அந்தாதியின் சாயல். ஆனால் அபிராமி பட்டரைப் போலவே ‘குணா’ படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி அந்தாதியில் எழுதியிருப்பார்.
முதல் பாடல் ‘அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு’ எனும் பாடல் உடம்பு எனும் வார்த்தையில் முடியும். ‘உ’ வை வைத்து அடுத்த பாடல் எழுதியிருப்பார் வாலி. ‘உன்னை நான், அறிவேன் என்னை, அன்றி யார் அறிவார், கண்ணில் நீர் வழிந்தால், என்னை அன்றி யார், துடைப்பார்’ என அப்பாடல் முடியும். துடைப்பார் எனும் சொல்லிலிருந்து ‘பார்’ சொல்லைக் கொண்டு, அடுத்த பாடலைப் ‘பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க’ என ஆரம்பித்து ‘க’வில் முடித்திருப்பார். ஆக, அடுத்த பாடல் ‘கண்மணி அன்போடு, காதலன் நான் எழுதும் கடிதமே’ எனும் பாடலில் முடியும். எல்லாவற்றையும் அசைப்போட்டுக் கொண்டே இருந்தது மனம்.
எல்லா முடிவிலும் ஒரு ஆரம்பம் இருக்கும் எனச் சொல்லுவார்கள். அந்தாதியும் அதைதான் உணர்த்துகிறது. கல்லில் சாய்ந்தபடியே மலையைப் பார்த்தேன். அந்தப் பிரமாண்டத்தில் தொடக்கமெது முடிவெது என எதுவும் தெரியவில்லை. அப்படி இருக்கவும் வாய்ப்பில்லை. வாழ்க்கையில் நாமாகச் சில தொடக்கத்தையும் முடிவுகளையும் உருவாக்கிக்கொள்கிறோம். முடிவுகளில் நிறைவும் தொடக்கங்களில் உத்வேகமும் அடைகிறோம்.
அந்த உற்சாகத்தைதான் அந்தாதி கொடுக்கிறது; ‘பாசா பாசா பியாரி’ கொடுப்பதும் அதைத்தான்.
No comments:
Post a Comment