ஒரு கல்லூரி விடுப்பில் நவீனை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தேன் (2003). கேமரன் மலைக்கு வருவது, அவருக்கு இரண்டாம் முறை. சிறுவயதில் பள்ளிச்சுற்றுலாவின் போது, கேமரன் மலைக்கு வந்திருந்ததாகச் சொல்லியிருந்ததார். வீட்டிற்கு யார் வந்தாலும் தேயிலை தோட்டத்திற்குப் பிறகு, புத்தர் கோயிலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். பிரிஞ்சாங்கில் அமைந்துள்ள இந்தக் கோயில் 90-களின் உயரமான புத்தர் சிலை கொண்ட கோயில்களில் ஒன்றாக விளங்கியது. மேட்டில் மிக அமைதியான சூழலில் அமைந்திருக்கும் இந்தப் புத்தர் கோயிலின் தரையில் கால் வைத்தாலே குளிர் உடல் முழுக்கப் பரவும். அன்று நல்ல மழை, குளிரில் புத்தரின் மந்திர ஜபத்துடன் மிகப் பெரிய புத்தர் சிலையின் முன் மண்டியிட்டு நீண்ட நேரம் புத்தரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
புத்தருக்கு அடுத்ததாக அவலோகிதேஸ்வரரின் சிலையும் மிகப் பெரிய உருவில் இருக்கும். கோயில் முழுக்க மண்டலா ஓவியங்கள் சூழ்ந்திருக்கும். அன்றே அவலோகிதேஸ்வரரின் பார்வை நவீனின் மீது பட்டிருக்கக்கூடும். சிகண்டி, தாரா போன்ற நாவல்களில் அதனின் பிரதிபலிப்பை என்னால் உணர முடிகிறது.
நேபாளில் அன்னப்பூர்னா மலையேற்றம் பயணம் முடிந்தவுடன் இனி ஆத்மாவுக்கான பயணம் என எங்களுக்கான சில பயணத் திட்டத்தை வகுத்துக் கொண்டோம். அந்த வகையில், புத்தர் பிறந்த இடமான லும்பினிக்குச் செல்வது எங்களின் முதன்மையான நோக்கமானதாக இருந்தது.
சரியாக 20 ஆண்டுகள் கழித்து, சில வெற்றி, தோல்வி, இழப்பு, சாதனை என அனைத்தையும் அனுபவித்து பக்குவப்பட்டு நான் பிறந்த இடத்தில் என்னை வந்து சேருவீர்கள் என அன்றே புத்தர் எங்களை அருள் புரிந்திருக்கக்கூடும்.
புத்தரின் ஆசிக்கேற்ப, அதே கல்லூரி மாணவர்களைப் போலவே லும்பினியில் அவர் முன் நின்றோம். மிகப் பெரிய புத்தரின் சிலை, ஓவியம், அவலோகிதேஸ்வரர், தாரா என நாங்கள் விட்டுச் சென்ற எல்லாமும், மீண்டும் எங்களை வந்து பற்றிக் கொண்டது. அதனின் விளைவு தான் 'குமாரிகள் கோட்டம்' நூல்.
நவீன், இந்தப் பயணக் கட்டுரையை எனக்கு சமர்ப்பித்திருக்கிறார் என புத்தகத்தைத் திறந்து பார்க்கும் போதுதான் தெரிய வந்தது. ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால் இவையனைத்தும் புத்தரின் ஆசி இல்லாமல் நடந்திருக்காது என உள்ளம் சொன்னது.
நவீனுக்கு என்னுடைய நன்றிகள்.
பணமும் வசதியும் இருந்தால், அனைவராலும் பயணிக்க முடியும். ஆனால், ஒரு பயணத்தை வேறொரு கலை வடிவமான எழுத்து கலைக்கு எடுத்துச் செல்ல, நவீனைப் போல எழுத்தாளர்களால் மட்டுமே முடியும். பல கலை கலாச்சாரங்கள் நிறைந்துள்ள இந்த உலகை, பயணங்கள் வழி கண்டு உணர்ந்து அவைகளை உங்களின் எழுத்தின் மூலம் தொடர்ந்து புதுமையாக காட்சிப்படுத்துவார் என நம்புகிறேன். மேலும் அவர் எழுதவும், நிறைய பயணங்கள் செய்யவும் வாழ்த்துகள்.
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி
1.10.2024
.
.
- குமாரி கோட்டம்
.
.
No comments:
Post a Comment