மண்டலா
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுபாவிடமிருந்து ஒரு முகநூல் பதிவு. அவள் பதிவிட்டிருந்த படத்தைப் பார்த்ததும், பணிச்சுமையினால் ஏற்பட்ட களைப்பு எல்லாம் பறந்தோடியது. கண்கள் அகலமாக விரிந்தன. முகம் புன்னகையை ஏந்திக்கொண்டது. ஒரு குளத்தில் எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் மிதக்கும் நீர் மலர்கள் போல மனம் அவ்வளவு அமைதியானது. அவள் அனுப்பிய படத்தை மிக உன்னிப்பாகப் பார்த்தேன்.
அது மண்டலா ஓவியம்.
திருமணமாகிக் கணவருடன் துபாயில் பணிபுரியும் சுபாவிற்கு உடனே அழைத்தேன். சுபாவும் நானும் மூன்று வயதிலிருந்து நண்பர்கள். பாலர் பள்ளியிலிருந்து படிவம் ஆறு வரை நாங்கள் இருவரும் ஓரே வகுப்பு. பரதநாட்டியம், சங்கீதம், பஜனை, யோகா, வீணை என நாங்கள் போகாத வகுப்புகளே இல்லை.
இரு முறையும் அழைப்புகள் துண்டிக்கப்பட்டன. நான்கு மாதக் கர்ப்பிணியாக இருக்கும் சுபாவின் உடல் நலத்தைப் பற்றிச் சட்டென கவலை வந்தது. தன்னந்தனியாக ஊர் பேர் தெரியாத நாட்டில் எப்படிச் சமளிக்கிறாள் எனப் பதற்றமும் பற்றிக் கொண்டது. சுமார் ஐந்து நிமிடம் கழித்து, அவளிடமிருந்து அழைப்பு வந்தது. பரவசத்தோடு அழைப்பை எடுத்தேன்.
“எனக்குத் தெரியுன்டீ, படத்தைப் பார்த்துட்டு கால் பண்ணுவேனு”, எனச் சொல்லி உரக்கச் சிரித்தாள். அவள் குரலில் எந்த மாற்றமும் இல்லை, துபாயில் எல்லாம் சரியாகப் போய் கொண்டிருக்கிறது என உணர்ந்து கொண்டேன்.
முகநூலில் சுபா வரைந்த மண்டலா ஓவியம்
“கருவுற்றதிலிருந்து வீட்டு ஞாபகம் அதிகம் வருது. கூடவே அழுகையும் வந்திருது. இந்த வயிற்றை வச்சிக்கிட்டு நடனப் பயிற்சியும் யோகாவும் செய்ய முடியல. ரொம்ப மூச்சி வாங்குது. அதான் மண்டலா ஆர்ட் வரைய ஆரம்பிசிட்டேன். பொழுது போகனும், நான் சுறுசுறுப்பா இல்லனா பேபியும் சோம்பேறி மாதிரி பிறந்திடும். சரி டீ, பேசினால் வேலைக்கு நேரம் ஆகிடும். உனக்கு மதியம் மெசேஜ் பண்ணுறேன். இன்னிக்குப் பாரு, நான் வரைந்திருப்பதைப் பார்த்து ஃபேஸ்புக்கில லைக், காமண்ட்ஸ் எல்லாம் பிச்சிக்கப் போது’ எனச் சொல்லி வழக்கம் போல அவள் பாணியில் சிரித்தாள்.
சிருஷ்டிக்குப்பின்பாக உருவாகும் மனத்திருப்தி அது. அதற்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு. நேரம் எப்போதும் இருக்காது, நம்மதான் உருவாக்கிக்கனும் எனச் சற்று முன் தொலைபேசியில் அவள் கூறியது மீண்டும் சிந்தனையில் ஒலித்தது. பள்ளி மண்டபத்தினுள் செல்ல மனமில்லாமல், நுழைவாசலில் நின்று கொண்டு மீண்டும் அவள் வரைந்த மண்டலா ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
இடைநிலைப்பள்ளியில் பயிலும் நாட்களில், மாணவர்களிடையில் சுபாவும் நானும் மண்டலா ஓவியம் வரைவதில் கொஞ்சம் பிரபலம். நாங்கள் நிறைய நண்பர்களுக்குத் திரட்டேட்டில், மேசையில், டைரியின் முகப்பில், காதல் கடிதங்களில், பரிசுகளில், சட்டையில் என மண்டலா ஓவியத்தை வரைந்து கொடுத்ததுண்டு. அப்படி வரைந்து கொடுக்கையில் வரும் பாராட்டுகளுக்கு அந்த வயதில் நாங்கள் அடிமை. எதிர்காலத் தொழில் வாய்ப்புக்காகத் தேடித் தேடிப் புத்தகங்களை வாங்கிப் படித்துக் கொண்டிருந்த நண்பர்களுக்கிடைய சுபாவும் நானும் ஆத்ம திருப்திக்கான வழியைத் தேடிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு எது சந்தோஷத்தைக் கொடுக்கிறதோ அதைத் தேடிச் சென்றோம். நண்பர்கள் வேடிக்கையாகப் பொழுதைக் கழிக்கையில், நாங்கள் மிகத் தீவிரமான செயல்களில் இறங்கியிருந்தோம். அப்படி ஆத்மாவுக்கு நெருக்கமானவை எல்லாம் கலை வடிவங்களாகவே இருந்தன.
“இத்தனை நாளா நான் வரையும்போது ஒரு பார்வைக்கூட பார்க்காத நீங்க, இன்னைக்கு என் பக்கத்துள்ள வந்து பார்க்க வைச்சிருக்கு இந்தக் கலர்ஸ். வண்ணங்களுக்கு அவ்வளவு சக்தி இருக்கு,” எனப் புகழ் மாமா கூறிக் கொண்டே ஏணி படியிலிருந்து இறங்கி வந்தார். அவர் சட்டை, உடம்பு முழுதும் வண்ணக் கறைகள். ஆனால் அவர் அழுக்காகத் தெரியவில்லை. நான் அவரின் கண்களில் ஏதோ ஒன்றை உணர்ந்தேன்.
“இன்றைக்கு இது போதும், பனியிறங்க ஆரம்பிச்சிருச்சி, நாளைக்குத் தொடரலாம்,” எனச் சக ஓவியரிடம் கூறிக் கொண்டே அருகிலுள்ள குழாயில் கைகளைக் கழுவிக் கொண்டிருந்தார். சுவருக்கு அருகில் சென்று பார்த்த பிறகுதான் தெரிந்தது அது ஒரு வட்ட வடிவிலுள்ள ஓவியம் என்று. புகழ் மாமா வட்டத்தின் மையப் பகுதியை மட்டும் வண்ணம் தீட்ட ஆரம்பித்திருந்தார். சுபா புதியவர்களிடம் மிக எளிதாக நட்பு கொள்ளக் கூடியவள். கொஞ்சம் அதிகமாகவும் பேசுபவளும்கூட. ஆனால் நான் அதற்கு எதிர்ப்பதம். கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறுவேன். வண்ணம் தீட்டப்படாமல் இருக்கும் இடங்களை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கையில், சுபா வழக்கம் போல புகழ் மாமாவிடம் தைரியமாகப் பேசத் தொடங்கியிருந்தாள்.
“நான் ஊர் காரரு மா, திருச்சி” எனப் புகழ் மாமா சுபாவிடம் கூறும்போது ஒருமுறை அவரைத் திரும்பிப் பார்த்தேன். பக்கத்துச் சுவரில் சுண்ணாம்பில் வரையப்பட்ட ஓவியமும் கண்ணில் தென்பட்டது. அதுவும் வட்ட வடிவில் இருந்தது. கோவிலை ஒரு முறை சுற்றிப் பார்க்கையில் கோயிலிலுள்ள எல்லா தூண்களிலும் இதே போன்ற ஓவியங்கள். இன்னும் ஒரு வாரத்தில் எல்லாவற்றைக்கும் வண்ணம் பூசியதும் கோவில் கும்பாபிஷேகத்தன்று எப்படிக் காட்சியளிக்கும் என மனக்கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தேன். சுபா புகழ் மாமாவிடம் நன்கு அறிமுகம் ஆகியவள் போல் பேசத் தொடங்கியிருந்தாள்.
மனதில் நிறைய கேள்விகள் தோன்றியபடி இருந்தது. “ஏன் எல்லாமும் வட்ட வடிவிலேயே இருக்கு?”, எனக் கொஞ்சம் தயங்கி கேட்டேன்.
‘ஏனா இது மண்டலா ஓவியம். மண்டலம் என்றால் சமஸ்கிருதத்தில் “வட்டம்” அல்லது டிஸ்காய்டுனு பொருள். ஆக மண்டலா ஓவியத்தை வட்டத்துக்குள்ளதான் வரையனும்.” எனக் கூறிக் கொண்டே தரையில் உட்கார்ந்தார் புகழ் மாமா. நீண்ட நேரம் நின்று வண்ணம் பூசி களைத்திருக்கக் கூடும்.
“ஏன் வட்டத்துக்குள்ளதான் வரையனும்? வேறு வடிவத்தில் வரைய முடியாது?” எனத் தொடர்ந்து கேள்விகள் என்னிடமிருந்து வந்தன.
தரையில் உட்கார்ந்திருந்த புகழ் மாமா, என்னை நிமிர்ந்து பார்த்து “ஏனா… வாழ்க்கை ஒரு வட்டம். நாம் வாழ்க்கையை ஒரு வட்டமாக இருக்கின்ற பூமியிலேதான் வாழ்கிறோம். பூமிக்கு முதலும் முடிவும் இல்லை. சக்கரம் போன்று சுழன்றுக்கொண்டே இருக்கும். பூமி மட்டுமில்லை பூமியில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புக் கொண்டும் சார்ந்து கொண்டும் சுழற்சியில் ஈடுபடுகிறது. உதாரணத்திற்கு 4 காலப் பருவங்கள், விதைகள் பூத்துப் பழமாகி மரமாகி மறுபடியும் விதையாகுதல், முட்டையிலிருந்து வரும் கோழிக்குஞ்சு, கோழியாகி மீண்டும் முட்டையிடுவது, கடல் நீர் நீராவியாக மாறி மழைத்துளிகளாக மீண்டும் பூமிக்கே வருவது, விலங்கு மற்றும் மனிதனின் உணவுச் சங்கிலி இவையனைத்துக்கும் ஒரு வகையான சுழற்சியில் ஈடுபடுகின்றன. இதில் யார் முதலில் தொடங்கியது யார் முடித்தது எனக் கூறவே முடியாது. கடவுளும் அப்படிதான். முதலும் முடிவும் அற்றவன். அதனால்தான் கோயில்களில் வட்ட வடிவில் இருக்கும் மண்டலா ஓவியங்களை வரைகிறோம்” என ஒரு சின்ன புன்னைகையுடன் என்னைப் பார்த்துச் சொன்னார். அந்த வயதில் இந்த ஒப்பிடுகள் மிகப் பிரம்பாண்டமாக மூளைக்குள் எட்டியது.
“வெரி குட். மண்டலா ஓவியம் ஒரு சின்னப் புள்ளியிலிருந்துதான் தொடங்கும். அந்தப் புள்ளி விரிவடைந்து இவ்வளவு பெரிய ஓவியமா ஆகுது. ஆனா இது எவ்வளவு பெரிய ஓவியம் ஆனாலும், மையப் புள்ளியை நோக்கிதான் நம் கவனத்தை ஈர்க்கும். சூரியன் மாதிரி. சூரியனிலிருந்து வெடித்துச் சிதறியவை நவகிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள், நிலா என வெவ்வேறாக மாறிக் காட்சியளித்தாலும் சூரியன்தான் மையப் புள்ளி. அவையனைத்தும் சூரியனால்தான் செயல்படுகின்றன. மண்டலா ஓவியத்தின் மையப் பகுதியும் அப்படிதான், சக்தி வாய்ந்தது, கவனத்தை ஈர்க்கும்.” என அவர் கூறியதைக் கேட்க மேலும் வியப்பைத் தந்தது.
“நீங்க ஓவியருனுதான் நினைச்சேன், நீங்க சூரிய மண்டலம் அறிவியல் தகவல்கள் பத்தியெல்லாம் பேசுறீங்க, நீங்க படிச்சிருக்கிறீர்களா? ஏன் வேலைக்குப் போகாமல் ஓவியரா ஆயிட்டிங்க?”, என சுபா கேட்டாள். கல்விக்கும் அறிவிற்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியாத வயது அது. இந்தக் கேள்வியை நினைத்துப் பார்த்தால் இப்பவும் சிரிப்பு வருகிறது. அன்று புகழ் மாமாவிடமும் அதே சிரிப்புதான் இருந்தது.
மண்டலா கலையை இயற்கையோடு ஒப்பிட்டுக்காட்ட, புகழ் மாமா கோயில் வாசலிலுள்ள பூந்தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். மாலை வேலையில் பனி இறங்கும் தருவாயில் சிவப்பு ரோஜாக்கள் இன்னும் அழகாகக் காட்சியளித்தது. ரோஜாக்களின் இலைகளில் பனித்துளிகள் படர்ந்திருந்தன. புகழ் மாமா ஒரு ரோஜா பூவின் காம்பைக் கையில் பற்றி எங்கள் பக்கம் சாய்த்து, இந்த ரோஜாவைக் கூர்ந்து பார்க்கச் சொன்னார். ரோஜாவின் மையப் பகுதியிலிருந்து அதனைச் சுற்றி அழகான இதழ்கள். பிறகு அடுத்த இதழ்களின் வரிகள், அந்த இதழ்களுக்குள் வரிவரியான கோடுகள். கோடுகளில் பல வண்ணக் கலவைகள், அந்தக் கலவைக்குள் பல வடிவங்கள் என இவையனைத்தும் சேர்ந்ததுதான் ஒரு முழுமையான ரோஜா என விளக்கினார். சிறுவயதிலிருந்து ரோஜாக்களுக்கு மத்தியில் வளர்ந்திருந்தாலும், அன்று ரோஜா வெறொன்றாகக் காட்சியளித்தது. ரோஜாவின் மையப் புள்ளியிலிருந்து அது முழுமையாகும் விதத்தைப் பார்க்க அவ்வளவு அழகாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. சட்டென புகழ் மாமா இலைகளுக்கிடையில் நகர்ந்து சென்ற நத்தை ஒன்றைக் கையில் ஏந்தி எங்களிடம் காட்டினார். நத்தை ஓட்டின் வடிவமும் ஒரு சின்ன மையப் புள்ளியிருந்து தொடங்கியது. அதனின் உடலிலும் நிறைய கோடுகளும் வடிவங்களும் சூழ்ந்திருந்தது. அன்றுதான் முதல் முறை நான் நத்தையைக் கூர்ந்து ரசித்தது. ரோஜா இலைகளிலுள்ள மையப் புள்ளிகளையும் கவனித்தோம். ஒன்றைக் கூர்ந்து கவனித்தால்தான் அதனுடைய அழகும் தன்மையும் தெரியும் என அன்று புகழ் மாமா எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். இந்தத் திறனை ஓவியத்தில் மட்டுமல்லாமல் அனைத்துச் செயல்பாட்டிலும் அமல்படுத்த வேண்டும் என உள்ளிருந்து மனம் அறிவுறித்தியது. இந்த உலகத்தில் எல்லாமே ஒரு சின்ன புள்ளியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. புள்ளியானது கோடுகள் மற்றும் பிரபஞ்சத்தை அடையாளப்படுத்தும் வடிவங்களால் சூழப்பட்டு மண்டலா ஓவியமாகப் பிரதிபலிக்கிறது எனப் புகழ் மாமா சொல்லுகையில், எனக்குச் சட்டென ஒரு யோசனை வந்து, என் கைவிரல்களை அவர் முன் நீட்டினேன். அதில் பதிந்திருக்கும் கைரேகைகளும் ஒரு சிறு புள்ளியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது எனச் சொன்னேன். உரக்கச் சிரித்தப் படி, கைரேகைகள் மட்டுமில்லை நம் உடலே ஒரு சின்ன நுக்லியஸ் என அழைக்கப்படும் வித்திலிருந்துதான் உருவானது. Micro to Macro என மிக பெரிய அறிவியல் தத்துவத்தை மிக சாதாரணமாகச் சொல்லி எங்களைக் கடந்து கோவிலுக்குள் நுழைந்தார் புகழ் மாமா.
எனக்கு மண்டலா ஓவியத்தில் அடங்கியிருக்கும் ஒவ்வொரு அர்த்தமும் அங்கமும் மேலும் மேலும் வியப்பை அளித்துக் கொண்டே இருந்தது. மண்டலா வெறும் ஓவியமாக மட்டும் இருக்க முடியாது என மனம் உணரத் தொடங்கியது.
“மாமா, மண்டலா ஓவியத்தைக் கோயில்லே மட்டும்தான் வரைவாங்கலா?”, என என்னுடைய அடுத்த கேள்விக்கான பதிலைக் கூறும் முன், சக ஓவியர் தயார் செய்திருந்த தேநீரை ஆவி பறக்க ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்தார். அவர் கைகளில் வண்ணங்கள் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் கூறும் பதிலுக்காக வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
“கோயில்களில் மட்டுமில்லை. யோகா மற்றும் தியானம் செய்யும் நிலையங்களிலும் மண்டலா ஓவியம் வரைவார்கள். மன தத்துவ மருத்துவர்கள் ‘ஆர்ட் திராப்பி’ (art therapy) வழி சிகிச்சை வழங்க இந்த ஓவியத்தைப் பயன்படுத்துகிறார்கள். எதிர்காலத்தைக் கணிக்கும் ஜோதிடர்களும் மண்டலா ஓவியத்தைதான் வரைந்து கணிப்பதுண்டு. ஒன்று சொன்னால் ஆச்சிரியப்படுவீர்கள், என்ன தெரியுமா? மந்திரவாதிகளும் மண்டலா ஓவியத்தைதான் வரைந்து, அதன் மேல்தான் பூஜை செய்வார்கள். இப்படிப் பல துறையில் மண்டலா ஓவியம் பரவியிருக்கு” எனப் புகழ் மாமா கூறுகையில் நான் வாசிக்கும் வீணையிலும் இது போன்ற ஓவியங்கள்தான் வரையப்பட்டிருக்கும் என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டேன்.
“மண்டலா ஓவியமாக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அது ஆன்மிகம் மற்றும் கலாச்சார சடங்குகளின் சின்னமாகத் திகழ்கின்றது. இந்தியாவில் மட்டுமில்லாமல், திபெத், நேபாளம், சீனா, ஜப்பான், பூட்டான் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் மண்டலா ஓவியங்களைக் காணலாம்,” எனப் புகழ் மாமா கூறியது பெரிய ஆச்சரியத்தைக் கொண்டு வந்தது.
“எப்படி இந்திய கோயில்களில் வரையும் ஓவியம் சீனா ஜப்பான் வரைக்கும் போனது?”, என உலக அறிவு இல்லாத சிறுமிகளிடம் மீதமிருந்த தேநீரைக் குடித்துக் கொண்டே பொறுமையாகப் பதில் கூறினார் புகழ் மாமா. “எங்கெல்லாம் பெளத்தம் மதமும் இந்து மதமும் இருக்கிறதோ, அங்கெல்லாம் மண்டலா ஓவியம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இதனை முதன் முறையாக உருவாக்கியவர் புத்த மதத்தைப் பரப்பிய சித்தார்த்த கௌதமர். பிற நாடுகளில் புத்த மதத்தைப் பரப்ப மண்டலா ஓவியத்தை ஒரு உத்தியாகப் பயன்படுத்திக் கொண்டார். தியானம் செய்யும் பொழுது சிந்தனையையும் மனதையும் ஒருநிலை படுத்த மண்டலா ஓவியத்தைப் பயன்படுத்தினார் கௌதமர். உங்களைப் போல் சிறுவர்கள் கோயிலுக்கு வந்தால் பிராத்தனைச் செய்வதைவிட வேடிக்கைப் பார்ப்பதுதான் அதிகம். பெரியவர்களும் அப்படிதான். வேடிக்கை பார்க்கையில் இது போன்ற ஓவியங்கள் கண்களில் தென்பட்டால் மனதையும் சிந்தனையும் ஒருநிலை படுத்தி மீண்டும் பிரார்த்தனையைத் தொடங்க முடியும். அதனால்தான் இந்து மற்றும் புத்த ஆலயங்களில் மண்டலா ஓவியங்கள் நிரம்பியிருக்கு” என்றார்.
” மனதையும் சிந்தனையையும் ஒருநிலை படுத்துமா? இது வெறும் ஓவியமா மட்டும் இருக்க முடியாதுனு எனக்கு முதல தோனிச்சி” என்றேன்.
‘நாம் கடைபிடிக்கும் எல்லாவற்றுக்கும் அதற்கான காரணங்கள் உள்ளன. ஆனால் அதைக் கடவுள் பக்தி என நம்பிக்கைகளின் அடிப்படையில் சொல்லாமல் அறிவியல் அடிப்படையில் கூறினால் அதனின் பயன் வலுவடையும். எல்லா ஓவியங்கள் போல மண்டலா ஓவியம் எண்ணங்களின் வெளிப்பாடு மட்டுமில்லை. மனதையும் சிந்தனையையும் ஒரு நிலை படுத்தும் ஓவியம். மன அழுத்தம், மனச் சோர்வைக் குணப்படுத்தும். இவை ஒவ்வொன்றுக்கும் ஆழமான அர்த்தமும் அடங்கியிருக்கு. எட்டு வரிகள் கொண்ட மண்டல ஓவியம் உலக அளவில் பிரசித்திப் பெற்றது. எட்டு வரிகள் கொண்ட ஒரு சக்கரத்தின் வட்ட இயல்பு ஒரு சரியான பிரபஞ்சத்தின் கலை பிரதிநிதியாகச் செயல்படுகிறது. எட்டு சக்கரங்கள் புத்த மதத்தின் எட்டு மடங்கு பாதையைப் பிரதிபலிப்பவை. இது விடுதலை மற்றும் மறுபிறப்புக்கு வழிவகுக்கும் நடைமுறைகளின் சுருக்கமாகும். வட்டத்தில் மணிகளை வரைந்தால் ஞானம் மற்றும் தெளிவு பிறக்கும். முக்கோணங்களை வரைந்தால் மேல் நோக்கி செல்லும் ஆற்றலையும் படைப்பாற்றலையும் குறிக்கின்றன. தாமரை மலர் புத்த மதத்தில் ஒரு புனித சின்னம் ஆகும். நம் இந்து மதத்திலும்கூட, தாமரையின் ஓவியம் சமநிலையைச் சித்தரிக்கின்றது. ஒரு தாமரை நீருக்கடியில் இருந்து ஒளியை அடைவது போல, ஒரு மனிதனும் ஆன்மீக விழிப்புணர்வையும் ஞானத்தையும் உள்ளிருந்து அடைகிறான். இந்து மற்றும் புத்த மதத்தில், மண்டலத்திற்குள் நுழைந்து அதன் மையத்தை நோக்கிச் செல்வதன் மூலம், பிரபஞ்சத்தில் எதிர்க்கொள்ளும் துன்பத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, மகிழ்ச்சியான செயல்முறைகளின் மூலம் வழிநடத்தப்படுவோம் என்பது மண்டலா ஓவியத்தின் மீது உள்ள ஒரு நம்பிக்கை. அதே நம்பிக்கை உங்கள் இருவரையும் வழிநடத்த வேண்டும் என நான் பிராத்திக்கிறேன்,” எனக் கூறிக் கொண்டே புகழ் மாமா எங்கள் இருவரின் தலையையும் தொட்டு ஆசிர்வதித்தார். நூற்றுக்கணக்கான மண்டலா ஓவியங்களை வரைந்த அந்த இரு கைகளின் ஆற்றல் எங்களின் தலையெனும் மண்டலத்திற்குள் நுழைந்து மூளையெனும் மையத்தை நோக்கிச் செல்வதை உணர்ந்தோம். இன்று முகநூலில் சுபா வரைந்த மண்டலா ஓவியம் அதைப் பிரதிபலித்துக்கொண்டுள்ளது.
------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------
For more Mandala Arts by Subashini - https://m.facebook.com/story.php?story_fbid=892588464929609&id=100025353904032
No comments:
Post a Comment