2026-06-04

Reader's Voice 2 - Apsara

 


அன்புள்ள கோகி டிச்சருக்கு, 


"கீரவாணி" கட்டுரை, அப்சரா நூலில் என்னை மிகவும் ஆழமாகத் தொட்டு, மனதை உலுக்கிய கட்டுரைகளில் ஒன்று.


நூல் வெளியீட்டு விழாவில் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் குறிப்பிட்டது போல, இது ஒரு கட்டுரை அல்ல, ஒரு கதை போல இருந்தது. வாசகர்களின் உள்ளத்தில் நீண்ட நாட்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆழமான வாழ்க்கைக் கதை. வாசித்து முடித்த பின்னரும் அதன் நினைவுகள் மனதில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.


இந்தக் கட்டுரையை வாசித்த பிறகு, கீரவாணி பாடல்களையும் கீரவாணி ராகத்தையும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. அந்த ராகத்தின் சோகமும் அழகும், கட்டுரையின் உணர்வுகளோடு ஒன்றிணைந்து மனதை நிரப்பின.


கட்டுரையை வாசிக்கும்போது நானும் உங்கள் சங்கீத வகுப்பில் உடன் இருந்தது போல உணர்ந்தேன். கட்டுரையின் இறுதி இடங்களில் உண்மையாகவே உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. வாசகர்களைக் கதைக்குள் முழுமையாக இழுத்துச் செல்லும் எழுத்து நடை உங்களுக்கு வாய்த்திருக்கிறது.


உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் அறிந்திருப்பதால், இந்தக் கட்டுரையின் உணர்வுகள் என்னை இன்னும் அதிகமாகத் தாக்கின. குறிப்பாக, இன்று நம்முடன் இல்லாத உங்கள் அம்மாவை இந்தக் கட்டுரையின் மூலம் மீண்டும் உயிர்ப்பித்து, அந்த தருணங்களை வாசகர்கள் கண்முன் நிறுத்திய விதம் மிகவும் நெகிழ்ச்சியளித்தது. அவர் மீண்டும் நம்மோடு பேசிக்கொண்டிருப்பது போன்ற உணர்வை இந்தக் கட்டுரை ஏற்படுத்துகிறது.


உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் சந்தித்த மறக்க முடியாத மனிதர்களையும், காலத்தால் அழியாத நினைவுகளையும் இவ்வாறே தொடர்ந்து எழுதி பதிவு செய்ய வேண்டும். உங்கள் எழுத்தின் வழியாக அவர்கள் அனைவரும் இலக்கியத்தில் அழியாத கதாபாத்திரங்களாக வாழட்டும்.


அன்பும் பாராட்டும் நிறைந்த வாழ்த்துகள்.


உங்கள் தோழி, குணவதி❤️

No comments:

Post a Comment