அப்சரா நூல் ஆசிரியர் கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தியின் ஏற்புரை
அனைவருக்கும் வணக்கம். என்னுடைய புத்தகத்தை விமர்சனம் செய்த சுவாமிக்கு நன்றி. என்னுடைய முதல் கட்டுரையிலிருந்து இந்த புத்தகத்தை வெளியிடும் வரை எனக்கு மிகவும் ஆதரவாகவும், ஊக்கமளிப்பவராகவும் இருந்த எழுத்தாளர் நவீனுக்கு என்னுடைய நன்றி.
நான் சிறுவயதிலிருந்தே நிறைய கலைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறேன். ஒவ்வொன்றையும் மேடையில் நிகழ்த்தும்போதும், அதைப் பற்றிப் பேசும்போதும், சிலர் ஆர்வத்துடன் பார்ப்பார்கள்; சிலர் வெறும் பொழுதுபோக்கிற்காகப் பார்ப்பார்கள்; சிலர் இதைப் பார்க்கவே மாட்டார்கள். இது மிகவும் சலிப்பான விஷயம் என்றும், கர்நாடக இசை மிகவும் போர் (bore) என்றும் பல காரணங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
அப்போது எனக்குத் தோன்றும் ஒரு விஷயம்: சினிமாவில் வரும் பாடல்கள், நடனம் மற்றும் கலைகள் அனைவரையும் எளிதில் சென்றடைகின்றன. ஆனால், பாரம்பரிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கலைகள் மக்களிடம் சென்றடைவது மிகக் குறைவாகவே உள்ளது. இதை அறிந்தவர்கள் தான் இதில் ஏதாவது செய்ய முடியும் என்ற எண்ணத்தில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன்.
நான் முதன்முதலில் எழுதிய கட்டுரையின் பெயர் 'அப்சரா'. கம்போடியாவிற்குப் பயணம் சென்று வந்த பிறகு எழுதிய முதல் கட்டுரை அது. இந்திய இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் நடனத்தைப் பரப்பும் தேவதைகளாக 'அப்சரா' (ரம்பை, மேனகை, ஊர்வசி போன்றவர்கள்) குறிப்பிடப்படுகிறார்கள். பலரும் அவர்களைத் தேவலோகத்தில் ஆடுபவர்கள் என்று மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் கலைகளைப் பரப்பும் பணியையும் செய்தார்கள் என்பது நம்பிக்கை.
இந்த புத்தகத்தில் உள்ள கலைகள் அனைத்தும் இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் மற்றவர்களுக்கும் பரவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதற்கு 'அப்சரா' என்று பெயரிட்டேன். இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு, உங்கள் அன்றாட வாழ்க்கையில் அதைப் பொருத்திப் பார்த்தாலோ, அல்லது அந்த கலைகளை ஒரு நிமிடம் நின்று ரசித்தாலோ, அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றி என்று நான் நினைக்கிறேன்.
வல்லினத்தில் எனக்குத் தொடர்ந்து எழுத வாய்ப்பளித்த எழுத்தாளர் ம.நவீனுக்கும், வல்லினம் குழுவினருக்கும் மிக்க நன்றி.


No comments:
Post a Comment