Reader's Voice 6 on Apsara by Theva Kumar
வணக்கம்
நான் தேவகுமார். அப்சராவை வாசித்து விட்டேன். ஏற்கனவே வல்லினத்தில் உங்கள் பத்தியை வாசித்துள்ளேன். உங்கள் பெயரை விட நீங்கள் எழுதும் பத்திகளின் தலைப்பை உங்களின் பெயராக நினைவில் எடுத்து கொள்வேன்.
ஏற்கனவே உங்களை வாசிப்பின் வழியாக அறிந்து வைத்திருந்தேன். நவீன் எழுதிய குமாரிகள் கோட்டம் எனும் பயண அனுபவத்தில் உங்களின் புகைப்படத்தைப் பார்தேன்.
சென்ற ஆண்டு வல்லினம் நிகழ்ச்சியில் உங்கள் முன் இருக்கையில் அமர்ந்திருந்தேன். அப்போது உங்களை சுங்குடி என நினைவில் அடையாளப் படுத்திக் கொண்டிருந்தேன். கடந்த மாதம் முதல் எழுத்து நிகழ்ச்சியில் உங்கள் பின் இருக்கையில் அமர்ந்திருந்தேன். என் நண்பனிடம் அப்சரா புத்தகத்தை எழுதியது இவர் தான். இப்போதே ஆட்டோகிராப் வாங்கி விடுவோம் என்றேன். அவன் என்னைப் பொருமையாக இருக்க சொன்னான். பிறகு அப்சராவின் பக்கங்களைத் திருப்பி ஏற்கனவே வாசித்திருந்த வற்றை அவனிடம் காட்டினேன்.
உங்கள் படைப்புகள் என்னை ஈர்த்த முதல் காரணம் நீங்கள் தேடல் உள்ள ஒர் ஆன்மா. கலைகளில் தேடல். சிறு வயதிலேயே அந்தத் தேடல் உங்களிடம் இயற்கையாக அமைந்துள்ளது. அப்சராவை வாசித்த அனுபவத்தில் சொல்வதானால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உங்கள் வழியாக இசை (கீரவாணி), நாட்டியம், மண்டலா, காலச்சாரம், அப்சரா/ தாரா போன்ற கலைகளைப் பிரபஞ்சம் படைப்புகளின் வாயிலாக (வழியாகவும் கூட) வாசகர்களுக்குக் கொண்டு சேர்த்துள்ளது.
குரு தட்சணையில், எவ்விதக் கலைப் படைப்பாக இருந்தாலும், அதன் குறிக்கோள் ரசத்தை உற்பத்தி செய்வது அதாவது மனதளவில் அனுபவிக்கும் அனுபவ நிலை என்று ஒரு நர்த்தகியாக உங்களை முன் நிறுத்தி குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு நர்த்தகியாகவே எல்லா கலைகளையும் நோக்கி பயணித்துள்ளீர்கள். நர்த்தகியான நீங்கள் இசை, மண்டலா, காலச்சக்கரம், தாரா, கடவுளின் அழைப்பு எனப் பலவற்றைக் (கலைகளை) குறித்து அபிநயம் பிடித்துள்ளீர்கள். கலைகளை நோக்கி, அதன் பாவத்தை நோக்கி வாசகர்களைக் அழைத்து சென்றுள்ளீர்கள். அதனால், நீங்கள் குறிப்பிடும் கலைகள் குறித்தும் வாசகனாக அதே உணர்ச்சி நிலையை ( மனதளவில் அனுபவிக்கும் அனுபவ நிலை) அடைய முடிந்தது.
ஒரு முறை வாசித்து ஒதுக்கி விடக் கூடாத புத்தகங்களில் உங்களது அப்சராவும் ஒன்று. மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட வேண்டிய புத்தகம். ஒரு நர்த்தகியாகவே தொடர்ந்து அறிந்து ஆழ்ந்து எழுத வாழ்த்துகள். நன்றி
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
வணக்கம் தேவகுமார்,
உங்கள் அபிப்பிராயத்தைப் படிக்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அப்சராவை இவ்வளவு கவனமாக வாசித்து, அதன் உணர்வுகளையும் தேடல்களையும் இவ்வளவு அழகாகப் புரிந்துகொண்டதற்கு ரொம்ப நன்றி. உங்கள் அன்பும் ஊக்கமும் தொடர்ந்து எழுதுவதற்கு எனக்கு நிறைய உற்சாகத்தைத் தருகிறது. மிக்க நன்றி.
கோகிலவாணி
No comments:
Post a Comment